Published : 06 Feb 2014 12:00 AM
Last Updated : 06 Feb 2014 12:00 AM

தமிழகத்தில் மீண்டும் தொடங்கியது மின்வெட்டு

கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக சென்னை தவிர மற்ற மாவட்ட நகர்ப்பகுதிகளில் ஒரு மணி நேரமும், கிராமங்களில் 2 மணி நேரமும் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு வரை, இந்த நிலை நீடித்தது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் 8 முதல் 16 மணி நேரம் வரைகூட மின்வெட்டு அமலில் இருந்தது. மின்வெட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண, மேட்டூர், வடசென்னை, வள்ளூர் மற்றும் தூத்துக்குடியில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

24 மணி நேர மின் சப்ளை

இதில் மேட்டூர், வள்ளூர் நிலையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. வடசென்னை அனல் மின் நிலையத்தில் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே, காற்றாலைகளிலும் மின் உற்பத்தி அதிகரித்ததால், சில மாதங்களாக மின்வெட்டு குறைந்திருந்தது. இந்த ஆண்டில் சீசன் முடிந்த நிலையிலும், காற்றாலைகளில் 500 மெகாவாட்டுக்கு அதிகமாகவே தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி யானது. மேலும், குளிர்காலம் என்பதால் மின் தேவையும் குறைந் தது. அதனால் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப் பட்டது.

மீண்டும் மின் வெட்டு

இந்நிலையில், புதன்கிழமை முதல் மீண்டும் மின்வெட்டு தொடங்கியுள்ளது. சென்னை புறநகர்ப் பகுதிகள் மற்றும் மாவட்ட நகரப் பகுதிகளில் ஒரு மணி நேரமும், கிராமங்களில் 2 மணி நேரம் வரையிலும் மின் வெட்டு அமலுக்கு வந்துள்ளது. மின் வெட்டு நேரம் படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன்கிழமை காலை 7.50 மணி நிலவரப்படி, தமிழகத்தில் 1,550 மெகாவாட் மின்சாரம் பற்றாக்

குறை ஏற்பட்டது. 11,109 மெகாவாட் மின்சாரம் விநியோகிக்கப் பட்டது. வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான இணைப்பு களுக்கு, 1260 மெகாவாட் மின்சாரம் தடை செய்யப்பட்டது. மீதம் தொழிற்சாலைகளுக்கான மின்சாரத் தடை மூலம் சமாளிக்கப்பட்டது. இதுகுறித்து, தமிழக மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

பனிக்காலம் முடிந்து கோடைக் காலம் தொடங்க உள்ளது. குளிர் குறைந்து, வெப்பம் அதிகரிப்ப தால் மின்சாரத் தேவையும் அதிகமாகிறது. காற்றாலை மின் உற்பத்தியும் குறையத் தொடங்கியுள்ளது. வழக்கமாக அக்டோ பருடன் காற்றாலை சீசன் முடிந்து மீண்டும் ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் தொடங்கும். இடைப்பட்ட காலத்தில் மிகக் குறைந்த அளவிலேயே காற்றாலை மின் உற்பத்தி இருக்கும்.

தட்டுப்பாடு ஏற்படும்

இந்த ஆண்டு சீசனுக்குப் பிறகும் காற்றாலை மின் உற்பத்தி குறையாமல் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு வரை காற்றாலைகள் மூலம், 850 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தியானது. மேலும் புதிய மின் நிலையங்களில் சோதனை ஓட்டம் மூலம் அதிக அளவு மின்சாரம் கிடைத்தது. இதனால் மின்வெட்டு இல்லாமல் இதுவரை சமாளிக்கப்பட்டது. வெயில் காலம் தொடங்குவதால் மின்சாரத் தேவை அதிகரிக்கும். காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்துவிடும். எனவே, மின் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மின் நிலையங்களில் பழுது

தமிழகத்துக்கு மின்சாரம் வழங்கும் கூடங்குளம் அணு மின் நிலையம், கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் முதல் அலகு (220 மெகாவாட்), நெய்வேலி முதல் நிலை விரிவாக்கம் முதல் அலகு (210 மெகாவாட்), மேட்டூர் மூன்றாம் நிலை (600 மெகாவாட்), வடசென்னை இரண்டாம் நிலையில் இரண்டாம் அலகு (600 மெகாவாட்) ஆகிய மின் நிலையங்களில் பழுது ஏற்பட்டதால் புதன்கிழமை உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x