

நோய் தாக்குதலால், தேனி மாவட்டத்தில் வெற்றிலை சாகுபடியின் பரப்பளவை விவசாயிகள் குறைத்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், தாமரைக்குளம், ஜெயமங்கலம், மேல்மங்கலம், சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில், சுமார் 800 ஏக்கரில் வெற்றிலை சாகுபடி நடந்து வருகிறது. சில விவசாயிகள் சொந்த நிலத்திலும், பலர் குத்தகைக்கும் நிலத்தை எடுத்து வெற்றிலை விவசாயம் செய்து வருகின்றனர்.
இப்பகுதியில் பறிக்கப்படும் வெற்றிலை, அந்தந்த பகுதியில் உள்ள வெற்றிலை விவசாய சங்கங்கள் மூலம் பெங்களூரு, டெல்லி, புதுச்சேரி என வெளிமாநிலங்களுக்கும், நெல்லை, விழுப்புரம், ராஜபாளையம் என வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது வெற்றிலைக் கொடிகளில் வாடல்நோய் மற்றும் சுருட்டை நோய் தாக்கி வருவதால் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த, வெற்றிலைக் கொடிகள் வேரோடு கருகி வருகின்றன. இதனால், வெற்றிலை சாகுபடி செய்திருந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஜெயமங் கலம் வெற்றிலை விவசாயி எல். கிருஷ்ணன் கூறியதாவது: இரண்டு நாட்கள் கனமழை பெய்ததால் வெற்றிலைக் கொடிகளில் வாடல், சுருட்டை நோய்கள் தாக்கி விட்டன. இதைத் தொடர்ந்து, அருகில் உள்ள மற்ற கொடிகளுக்கும் நோய் பரவி வருகிறது. இந்நோய் தாக்கிய கொடிகளை அழித்துவிட்டு, வேறு நிலத்தை குத்தகைக்கு எடுத்து வெற்றிலைக் கொடி நடவேண்டிய நிலை உள்ளது. நோய் தாக்கிய இடத்தில், மீண்டும் வெற்றிலைக் கொடியை நட்டால் வளராது.
தோட்டக்கலைத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், நோய் தாக்குதலை கட்டுப்படுத்த முடியவில்லை, இதன் காரணமாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் 1,300 ஏக்கருக்கு மேல் நடந்துவந்த வெற்றிலை சாகுபடியை விவசாயிகள் குறைத்து, தற்போது சுமார் 800 ஏக்கரில் நடவு செய்துள்ளனர். நோய் தாக்குதல் அதிகரித்தால் சாகுபடி பரப்பளவு மேலும் சுருங்கும் அபாயம் உள்ளது.
ஆண்டிபட்டி தொகுதியில், முதல்வர் ஜெயலலிதா போட்டியிட் டபோது இப்பகு தியில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று பிரச்சாரத்தின்போது வாக் குறுதி அளித்திருந்தார்.
அந்த வாக்கு றுதியை நிறைவேற்றி, வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்கப் பட்டால், நோய் தாக்குதலுக்கு புதிய மருந்துகள் கண்டறியப்பட்டு, அதனை கட்டுப்படுத்தி வெற்றிலை விவசாயத்தைக் காப்பாற்ற முடியும் என்றார்.