

அதிமுகவையோ, தினகரனையோ ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
''அதிமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது அந்தந்த கட்சியின் உரிமை. அதிமுக வேட்பாளர் யார் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதிமுகவையோ, தினகரனையோ ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை.
திமுகவுக்கே எங்கள் ஆதரவு. யார் போட்டியிட்டாலும் திமுக வெற்றி பெறுவது உறுதி. தினகரன் மீது வழக்குகள் இருப்பது பற்றி தேர்தல் ஆணையம் சட்டப்படி முடிவெடுக்க வேண்டும்.
பணப்பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம் இல்லாமல் மக்கள் விருப்பப்படி வாக்களிக்கும் வகையில் நேர்மையான, நியாயமான முறையில் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும்'' என்று திருநாவுக்கரசர் கூறினார்.
முன்னதாக அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், ஆர்.கே.நகர் தொகுதியின் அதிமுக வேட்பாளருமான டிடிவி தினகரன் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எங்களை ஆதரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.