டெல்லிக்குச் சென்று உள்துறை அமைச்சரை சந்தித்தார் ஆளுநர் கிரண்பேடி: புதுச்சேரியில் எதிர்கொள்ளும் சவால்களை தெரிவித்ததாக தகவல்

டெல்லிக்குச் சென்று உள்துறை அமைச்சரை சந்தித்தார் ஆளுநர் கிரண்பேடி: புதுச்சேரியில் எதிர்கொள்ளும் சவால்களை தெரிவித்ததாக தகவல்
Updated on
1 min read

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி டெல்லியில் சந்தித்தார். புதுச்சேரி எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பாக அவரிடம் விளக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அமைச்சரவை பரிந்துரை செய்த பல்வேறு கோப்புகளுக்கு அனுமதி தராமல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இருந்து வருவதாக அமைச்சர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இலவச அரிசி விநியோகம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்பட பல கோப்புகளை மத்திய உள்துறையின் பரிசீலனைக்கு கிரண்பேடி அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே சர்ச்சை நிலவி வருகிறது.

புதுச்சேரி நகராட்சி ஆணையராக இருந்த சந்திரசேகரன் பதவி மாற்றம் தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. மாறாக சபாநாயகர் வைத்திலிங்கம் பிறப்பித்த உத்தரவே அமல்படுத்தப்பட்டது. சந்திரசேகரன் தொடர்ந்து காத்திருப்பு பட்டியலில் உள்ளார். இந்த சர்ச்சைக்கு மத்தியில், முதல்வர் நாராயணசாமி ஏற்பாட்டின் பேரில் காங்கிரஸ் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அதில், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து மத்திய அரசிடம் புகார் தெரிவிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இதுவரை அனைத்துக் கட்சியினர் டெல்லி செல்லவில்லை.

இதற்கிடையே கடந்த 29-ம் தேதி நடைபெற்ற மாநில திட்டக்குழு கூட்டத்தில் கிரண்பேடியுடன், நாராயணசாமியும் பங்கேற்றார்.

அதைத்தொடர்ந்து கடந்த ஞாயிறன்று டெல்லிக்கு கிரண்பேடி திடீரென்று புறப்பட்டு சென்றார். நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கிரண்பேடி சந்தித்து பேசினார்.

அதுதொடர்பான புகைப் படத்தையும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தேன்.

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக பணியாற்றுவதில் உள்ள தடைகளை தெரிவித்ததுடன், பணியில் உள்ள சவால்கள் குறித்தும் தாம் தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும் புதுச்சேரி எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள், சவால்களையும் ராஜ்நாத் சிங்கிடம் தாம் விளக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in