

கிருஷ்ணகிரி அருகே 3 ஏக்கர் நிலம் கொடுத்து 14 வயது சிறுமியை 46 வயது விவசாயி திருமணம் செய்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள், சிறுமியை மீட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை வட்டம் கொடாங் கியூரைச் சேர்ந்தவர் விவசாயி மாதப்பன்(46). இவருக்கு திரும ணமாகி 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் இவரது மகளின் தோழியான அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை 3-வதாக, கடந்த 9-ம் தேதி திருமணம் செய்துள்ளார்.
இதற்காக அந்த சிறுமியின் தந்தைக்கு 3 ஏக்கர் நிலத்தைத் தருவதாக ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆட்சியர் கதிரவன் உத்தரவின் பேரில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் அதி காரிகள் விசாரணை மேற்கொண் டனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கடந்த சில தினங் களுக்கு முன்பு ஒரே நாளில் 9 இளம் வயது திருமணங்கள் நடந்ததாக புகார்கள் வந்தன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஊர்களில் விசாரணை மேற்கொண் டதில், மாதப்பன் திருமணம் செய்த 14 வயது சிறுமி மட்டும் மீட்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் தலைமறைவாகிவிட்டனர். மாதப் பனிடம் விசாரணை நடத்தப் பட் டு வருகிறது’’ என்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலைக் கிராமங்களில் இளம் வயது திருமணங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. அதிகாரிகள் எவ்வளவு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டாலும், அதனை சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் கண்டுகொள்வதில்லை. காதல், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங் களால் இளம் வயதிலேயே திருமணங்களை செய்வதாக பெற்றோர்கள் விசாரணையில் கூறுகின்றனர். இளம் வயது திரு மணத்தை தடுத்து நிறுத்தினாலும், சில நாட்கள் கழித்து ஆந்திரா, கர்நாடகாவில் உறவினர் வீடுகளுக் குச் சென்று திருமணம் செய்து வைத்துவிடுவதாக அதிகாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
சிறுமிகளுக்கு திருமணம் நடத் தும் பெற்றோர், உறவினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
தொடர் குழப்பத்தில் அதிகாரிகள்
14 வயது சிறுமி திருமண விவகாரத்தில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வின்சென்ட் சுந்தர்ராஜன் விசாரணை நடத்தினர். இதில் சிறுமியின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றில் வயது குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இருந்தன. ரேஷன் கார்டில் 22 வயது என்றும், ஆதார் கார்டில் 14 வயது என்றும் இருந்துள்ளது. வயது சரியாக தெரியாத காரணத்தால், சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.