Published : 28 Jun 2017 12:47 PM
Last Updated : 28 Jun 2017 12:47 PM

நெல்லை மேற்கு மாவட்டத்தை மிரட்டும் டெங்கு: சவாலாகும் பாதுகாப்பு

டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த சில மாதங்களாகவே திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைய மறுக்கிறது.

கடையநல்லூர் பகுதியில் ஒரு மாதத்துக்கு முன் வரை இந்நோய் பாதிப்பு அதிகம் இருந்தது. தற்போது, பாவூர்சத்திரம், ஆவுடையானூர், திப்பணம்பட்டி, அரியப்புரம், வெய்க்காலிப்பட்டி, புலவனூர் பகுதிகளில் வைரஸ் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இளம்பெண் பலி

கடந்த மாதம் ஆவுடையானூரைச் சேர்ந்த குமார் என்பவரின் மகள் பிரியாலட்சுமி (17) காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்தார். அவரது பெற்றோர் கூறும்போது, “மே 20-ம் தேதி பிரியாலட்சுமிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். டைபாய்டு அறிகுறி இருப்பதாகவும், திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்குமாறும் மருத்துவர் கூறினார்.

அதன்படி சேர்த்தோம். அங்கும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் எனக்கூறி, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்குமாறு தெரிவித்தனர். அங்கு சேர்த்த பிறகு, சிகிச்சை பலனின்றி மே 27-ம் தேதி பிரியாலட்சுமி இறந்துவிட்டார். எந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர் இறந்தார் என எங்களுக்குத் தெரியவில்லை.

பிளஸ் 2 தேர்வில் 1,026 மதிப்பெண் பெற்றிருந்த எங்கள் மகள், நர்ஸிங் படிக்க விரும்பினார். கல்லூரியில் சேர்க்க விண்ணப்பம் வாங்கி வைத்திருந்தோம். அதற்குள் இறந்துவிட்டார்” என சோகத்துடன் தெரிவித்தனர்.

அரியப்புரம்

ஆவுடையானூர் அருகில் உள்ள அரியப்புரத்தில் அப்பாதுரை என்பவரது மகன்கள் குணசீலன்(16), வினோத்ராஜ்(10) ஆகியோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். குணசீலன் கூறும்போது, “கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் டெங்கு எனத் தெரியவந்தது. 2 வாரம் சிகிச்சை பெற்ற பின் உடல்நிலை சரியானது. பின்னர், எனது தம்பி வினோத்ராஜுக்கும் டெங்கு பாதித்தது. ஒரு வாரம் தொடர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தான்” என்றார்.

வீட்டுக்கு ஒருவர் பாதிப்பு

அரியப்புரம், ஆவுடையானூரைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, “எங்கள் பகுதியில் வீட்டுக்கு ஒருவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள கிராமங்களிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஊராட்சி சார்பில் வீடு வீடாக கொசு மருந்து தெளித்தனர். வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றனர்.

கேரளாவில் இருந்து பரவுகிறதா?

கேரளாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. பாவூர்சத்திரம் அருகே காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளைச் சேர்ந்த பலர், கேரளாவில் வியாபாரம் செய்து வருகின்றனர். எனவே, அவர்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

வறட்சியின் காரணமாக இப்பகுதிகளில் வாரம் ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அனைத்து வீடுகளிலும் தொட்டிகள், பாத்திரங்கள், குடங்களில் தண்ணீரை சேமித்து வைத்துள்ளனர். இவற்றில் கொசுப் புழுக்கள் உற்பத்தியாக அதிக வாய்ப்புள்ளது.

தற்போது, மழை பெய்வதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே, டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சுகாதாரத் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்களும், மருத்துவ முகாம்களும் நடத்த வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நிலவேம்பு எங்கு கிடைக்கும்?

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தினசரி காலை 7.30 முதல் பகல் 12 மணி வரை நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாநகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு அவ்வப்போதும், திருநெல்வேலியில் தற்போது நடைபெறும் அரசு பொருட்காட்சி திடலில் ஞாயிறுதோறும், தாலுகா அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்தா பிரிவில் தினமும் நிலவேம்பு குடிநீர் கிடைக்கிறது.

நிவாரணம் தரும் நிலவேம்பு

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் கோ.சுபாஷ் சந்திரன்: வழக்கமாக கோடை முடிந்து மழை தொடங்கும் காலங்களில் மனித உடல்களில் எதிர்ப்பு சக்தி குறைவாகி வைரஸ் கிருமி தொற்று ஏற்படும். ஓரளவுக்கு மழை பெய்தால் பிரச்சினை இல்லை. விட்டுவிட்டு மிதமாக மழை பெய்யும் சூழ்நிலையில் வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வகையில் நிலவேம்பு குடிநீரை பருகலாம்.

காய்ச்சல் வந்தால் மட்டும் குடிக்காமல், முன்னரே தற்காத்து கொள்ள நிலவேம்பு குடிநீர் அருந்தலாம். சளித் தொற்று ஏற்பட்டால் வீட்டில் வளர்க்கும் துளசி, தும்பை போன்ற மூலிகைகளைக் கொண்டு கசாயம் தயாரித்து குடிக்கலாம்.

தென்காசியில் அதிக பாதிப்பு

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்தி அத்திய முனவரா:

டெங்கு காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 20 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் பலர் வீடு திரும்பும் அளவுக்கு குணமாகியுள்ளனர்.

தென்காசி, விக்கிரமசிங்கபுரம், கடையம், திருநெல்வேலி மாநகர பகுதிகளில் இருந்து அதிகமானோர் சிகிச்சைக்கு வருகின்றனர். இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து சுகாதாரத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

ரத்த பரிசோதனை செய்வது அவசியம்

டெங்கு காய்ச்சல் வைரஸ் கிருமியினால் உண்டாகும் நோயாகும். திடீரென்று 103 பாரன்கீட் முதல் 105 பாரன்கீட் வரையிலான காய்ச்சல், தலைவலி, கண்களின் பின்புறம் வலி, உடம்பு வலி, தோல் சினைப்பு மற்றும் வாந்தி வருதல், வயிறு வலி, சிறு குழந்தைகளுக்கு வலிப்பு போன்றவை அறிகுறிகள். சிலருக்கு இது எவ்வித அறிகுறியையும் உண்டாக்குவதில்லை. எனவே, காய்ச்சல் 5 நாட்களுக்கு மேல் இருத்தால் ரத்த பரிசோதனை செய்வது அவசியம்.

ஏடீஸ் எஜிப்டி வகை எனும் கொசுக்கள் மூலம் டெங்கு பரவுகிறது. இந்த கொசு, டெங்கு நோயாளியின் ரத்தத்தை உறிஞ்சும்போது, டெங்கு வைரஸ் கிருமியையும் பெற்றுவிடுகிறது. தொடர்ந்து கிருமியை பரவச் செய்கிறது. டெங்கு கொசுக்கள் பகலில் மட்டுமே கடிக்கும். டெங்கு காய்ச்சலை தவிர்க்க முதலில் கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும். மக்கள் தங்கள் வீட்டின் சுற்றுப்பகுதியில் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x