வருமானவரி அதிகாரிகள் போல நடித்து அதிமுக பிரமுகர் வீட்டில் கொள்ளை

வருமானவரி அதிகாரிகள் போல நடித்து அதிமுக பிரமுகர் வீட்டில் கொள்ளை
Updated on
1 min read

வருமானவரி அதிகாரிகள் போல நடித்து அதிமுக பிரமுகரின் வீட்டில் ரூ.1.25 லட்சம் பணம், 30 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் என்.ஆர்.ஐ. காலனியில் வசிப்பவர் ஆறுமுகம் (45). அதிமுக முன்னாள் கவுன்சிலரான இவர் அதிமுக மாவட்ட பிரதிநிதியாகவும் இருக்கிறார். இவரது மனைவி சாஜிதா (38). ஆறுமுகத்தின் வீட்டுக்கு திங்கள்கிழமை காலையில் ஒரு காரில் 8 பேர் வந்தனர். தங்களை வருமான வரி அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு வீட்டில் ஒவ்வொரு இடமாக சோதனை செய்ய ஆரம்பித்தனர்.

பின்னர் பீரோவில் இருந்த ரூ.1.25 லட்சம் ரொக்கம், 30 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு, இவற்றிற்கு சரியான ஆவணங்களை கொடுத்துவிட்டு, நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்துக்கு வந்து திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட முயன்றனர்.

அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஆறுமுகம் போலீஸுக்கு போன் செய்ய முயற்சி செய்தார். உடனே அவரது செல்போனை பிடுங்கி உடைத்தவர்கள், வேகமாக காரில் ஏறி சென்றுவிட்டனர். உடனே மனைவியின் தொலைபேசி மூலம் கானாத்தூர் காவல் நிலையத்துக்கு ஆறுமுகம் தகவல் கொடுக்க, அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர்தான் வந்தது கொள்ளை கும்பல் என்பது தெரிந்தது. சரியாக திட்டமிட்டு கொள்ளையை அரங்கேற்றியவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in