Published : 05 Jan 2016 03:55 PM
Last Updated : 05 Jan 2016 03:55 PM

மாஸ் காட்டிய கழகம்; 4 மணி நேரம் திணறித் தவித்த மக்கள்: 8 தகவல்களுடன் திமுக ஆர்ப்பாட்டம்

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி நடந்த திமுக ஆர்ப்பாட்டத்துக்கு தொண்டர்கள் குவிந்ததால் சென்னை வாலாஜா சாலையில் காலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக, அண்ணா சாலை, வாலாஜா சாலை, கடற்கரைச் சாலை ஆகிய பகுதிகளில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முன்னதாக, திமுக கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள சென்னை தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு, திருவள்ளூர் வடக்கு, தெற்கு ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

* காலை 8 மணியிலிருந்தே வட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து திமுகவினர் ஏராளமான பேருந்துகள், வேன்கள், கார்களில் வரத் தொடங்கினர். தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், இது கழகத்தின் 'மாஸ்' காட்டும் படலமாகவே பார்க்கப்பட்டது.

* காலை 9.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை சுமார் 4 மணி நேரம் சென்னையின் பிரதான சாலைகளான அண்ணா சாலை, கடற்கரைச் சாலை, திருவிக சாலை, ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வாலாஜா சாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

கூட்டம் எவ்வளவு?

* சுமார் 7000 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக போலீஸார் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், காலை 11.30 மணியளவில் கருணாநிதி கூட்டத்துக்கு வந்தபோது, குறைந்தது 10,000-க்கும் மேற்பட்டோராவது ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் இருந்திருப்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெரிசலில் சிக்கிய கருணாநிதி:

* திமுக தலைவர் கருணாநிதி காலை 11.15 மணிக்கு ஆர்ப்பாட்ட மேடைக்கு வந்தார். போக்குவரத்து நெரிசலால் அவரது வாகன அணிவகுப்பு அண்ணா சாலை, வாலாஜா சாலையில் ஊர்ந்து கொண்டே வந்தது. ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி, ஸ்டாலின் ஆகிய இருவர் மட்டுமே பேசினர்.

* ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்ற 3 தீர்மானங்களை, செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வாசித்தார்.

பொங்கிய பொதுமக்கள்:

* திமுக ஆர்ப்பாட்டத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால,் அவ்வழியாக பல்வேறு இடங்களுக்கும் சென்ற பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

* புதுப்பேட்டை வழியாகச் செல்ல வேண்டிய தினகரன் என்ற விற்பனை பிரதிநிதி 20 நிமிடங்களுக்கு மேலாக காத்துக்கிடக்க நேரிட்டதாக 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) கூறினார்.

* திமுக போராட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்ட பிரசாந்த் என்பவர் தன்னால் பரீட்சை மேற்பார்வையாளர் பணிக்கு நேரத்துக்கு செல்ல முடியாமல் போனதாக ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x