

சென்னை அருகே உள்ள எண்ணூர் துறைமுகத்துக்கு கடந்த மாதம் 28-ம் தேதி கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பலும், எரிவாயு ஏற்றி வந்த கப்பலும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இதனால் எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை கடல்பகுதியில் கச்சா எண்ணெய் பரவி பெருமளவில் மாசடைந்தது. கடல் வாழ் உயிரினங்கள் செத்து மிதந்தன. மேலும், மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல முடியாமல் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
மீன்களை வாங்கி உண்ண மக்கள் முன்வரவில்லை. இதைத்தொடர்ந்து நவீன உபகரணங்களைக் கொண்டு எண்ணெய் அகற்றும் பணி முடிக்கப்பட்டதாக துறைமுக அதிகாரிகளும், தமிழக அரசும் அறிவித்தது. முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டது எண்ணெய் படலம் என்று கருதி இருந்த நிலையில், இந்த எண்ணெய் படலம் கடந்த இரு நாட்களாக புதுச்சேரி வரை பரவியது.
கடலூர் கடற்பகுதியிலும் நேற்று முதல் எண்ணெய் படலம் பரவியிருக்கிறது. இதன் விளைவாக தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரை மற்றும் தாழங்குடா கடற்கரை பகுதிகளில் கச்சா எண்ணெய் துகள்கள் ஒதுங்கியுள்ளன.
இந்தப் பகுதிகளை ஆட்சியர் ஆட்சியர் டி.பி.ராஜேஷ் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் கச்சா எண்ணெய் துகள்கள் இங்கும் அங்கும் கிடக்கின்றன. மற்ற கடலோர கிராமங்களில், அங்குள்ள அலுவலர்கள் மூலமாக தகவல்களை பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 49 கடற்கரை கிராமங்கள் உள்ளன. 57.5 கி.மீ கடற்ரை உள்ளது. கடற்கரையில் உள்ள கச்சா எண்ணெய் துகள்களை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆய்வு செய்கிறோம். கடலின் உள்ளே ஏதாவது கச்சா எண்ணெய் படலங்கள் இருக்கின்றதா என்பதையும், பாதிப்புகள் ஏதும் உள்ளனவா என்பதையும் ஆராய்வதற்காக படகு மூலம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மீனவளத்துறை, காவல்துறை, நகராட்சி ஆகியவற்றைச் சார்ந்த அலுவலர்கள் கடலுக்குள் செல்கிறார்கள்.
நாளை (இன்று) காலை இந்த கடற்கரையிலுள்ள துகள்களை பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்ய கையுறை மற்றும் காலணிகளை அணிந்து 200 நபர்கள் சுத்தம் செய்ய உள்ளனர். இந்த துகள்களையெல்லாம் சேகரித்து எண்ணூருக்கு அனுப்ப மாவட்டம் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்த கடற்கரையிலுள்ள பொருட்கள் எதையும் கைகளால் தொடவேண்டாம். காலணிகள் அணியாமல் இப்பகுதிக்கு வரவேண்டாம். கடலில் சென்று குளிக்க வேண்டாம். நாளை சுத்தம் செய்தபிறகு கடற்ரை பகுதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பொதுமக்கள் இதுபற்றி பயப்படத் தேவையில்லை. மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கும்.'' என்று தெரிவித்தார்.