காவிரி, சிறுவாணி பிரச்சினை: சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு

காவிரி, சிறுவாணி பிரச்சினை: சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு
Updated on
1 min read

காவிரி, சிறுவாணி பிரச்சினைகளை பேச அனுமதி மறுத்ததாக சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

ஒரு வார கால இடைநீக்கத்துக்குப் பிறகு திமுக எம்எல்ஏ.க்கள் 79 பேரும் இன்று அவைக்குத் திரும்பினர். ஆனால், காவிரி, சிறுவாணி பிரச்சினைகளை பேச அனுமதி மறுத்ததாக சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், "இன்று நடைபெறும் விவசாய சங்கத்தினரின் மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு வணிகர்கள், தொழிற்சங்கத்தினர், அதையும் தாண்டி அதிமுகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் சபையை ஒத்திவைத்துவிட்டு அரசும் அதிமுகவும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது விவசாய சங்கத்தினரின் கோரிக்கை.

அவர்களது இந்தக் கோரிக்கையை அவையில் சுட்டிக் காட்டினேன். குறைந்தபட்சம் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு இப்பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறினேன். அதேபோல் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு மேற்கொள்ளும் முயற்சியஒ தடுத்த நிறுத்த வேண்டும், மத்திய அரசு உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மத்திய அரசு ஈடுபட வேண்டும் என மாநில அரசை வற்புறுத்த கவன ஈர்ப்புத் தீர்மானம் மூலமாக எடுத்துரைத்தேன். இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தினேன்.

ஆனால், எனது கோரிக்கைகள் மீது விவாதத்தை தொடர சட்டப்பேரவையில் அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in