Published : 06 Jun 2017 11:29 AM
Last Updated : 06 Jun 2017 11:29 AM

முல்லை பெரியாற்றில் தண்ணீர் திருட்டு: வைகை அணைக்கு நீர்வரத்து இல்லை

முல்லைப் பெரியாற்றில் பாசனத்துக்காக தண்ணீர் திருடப்பட்டு வருவதால் வைகை அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது.

தேனி மாவட்டத்தில் போதிய மழையில்லாததால், வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக, மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வைகையில் இருந்து விநாடிக்கு 60 கன அடி வீதம் திறக்கப்பட்டு வந்த தண்ணீர், கடந்த 7 மாதங்களாக விநாடிக்கு 40 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வைகை அணையில் தண்ணீர் தேக்கும் பொருட்டு, கடந்த 4 மாதங்களாக பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. ஆனால், பெரியாறு அணையின் நீர்பிடிப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால், பெரியாறு அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

இதனால், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் முதல் போக நெல் சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும் தண்ணீரும் இதுவரை திறக்கப்படவில்லை. மேலும் வைகை அணைக்கு திறக்கப்பட்டு வந்த 200 கனஅடி தண்ணீரும், கடந்த ஒரு வாரமாக 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பெரியாற்றின் கரையோரங்களில் சிலர், பாசனத்துக்காக மோட்டார் மூலம் தண்ணீரை திருடி வருகின்றனர்.

இதனால் வைகை அணைக்கு கடந்த இரண்டு நாட்களாக நீர் வரத்து முற்றிலும் நின்றது. இது குறித்து ‘தி இந்து’விடம் சமூக ஆர்வலர் அகஸ்டின் கூறியதாவது: கம்பம் பள்ளத்தாக்கில் 2-ம் போகத்துக்கு தண்ணீர் திறக்கப் படவில்லை. தற்போது முதல் போகத்துக்காக தண்ணீர் திறக் கப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உழவுப்பணி மேற் கொண்டனர். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக் கப்படாததால் சிலர் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து தண்ணீரை பாய்ச்சி வருகின்றனர்.

கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், தேனி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதி விவசாயிகள் சிலர் குடிநீரைத் திருடி விளை நிலங்களுக்கு பயன்படுத்தி வரு கின்றனர். தண்ணீர் திருட்டைத் தடுக்க கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வருவாய், மின்சாரம், காவல், தீயணைப்பு துறையினர் கூட்டாய்வு மேற்கொண்டு மின் இணைப்பு துண்டிப்பு, மோட்டார் பறிமுதல் செய்தது போல மீண்டும் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், வைகை அணையில் தண்ணீர் தேக்க முடியாமல் மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடும் குடிநீர் பஞ்சம் உருவாகும் அபாயம் ஏற்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x