

வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தை முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி திட்டமிட்டபடி சென்னையில் நாளை (ஜூன் 6) பேரணி நடைபெறும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில் அண்மையில் கொண்டு வரப்பட்ட திருத்தம், வழக்கறிஞர் களின் உரிமையைப் பறிப்பதாக வும், அவர்கள் அச்சமின்றி, சுதந்திரமாக தொழில் செய்ய முடியாத சூழ்நிலையை உருவாக்குவதாக வும் இருப்பதால் அதனை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். வழக்கறிஞர்கள் தங்கள் ஒற்றுமையை, உணர்வுகளை, ஆதங்கத்தை வெளிப்படுத்தவும், வலிமையைக் காட்டவும் சென்னையில் நாளை (ஜூன் 6) அமைதிப் பேரணி நடைபெறும்.
இப்பேரணி தேவையற்றது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரி வித்துள்ளார். வழக்கறிஞர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிப்படுத்தவே இப்பேரணி நடத்தப்படுகிறது. எனவே, திட்டமிட்டபடி சென்னையில் நாளை பேரணி நடைபெறும்.
இப்பேரணியில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் வழக்கறிஞர் கள் கலந்துகொள்கிறார்கள். இப்போராட்டம் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்துக்கு எதிரானது அல்ல. நீதிமன்ற புறக்கணிப்பும் கிடையாது. வழக்கு விசாரணை இருப்பவர்கள் நீதிமன்றத்துக்கு போய் வாருங்கள் என்றும், பேரணி நாளில் வழக்கு இல்லாதவர்கள் தவறாமல் கலந்துகொள்ளுங்கள் என்றும் தான் கோரியிருக்கிறோம்.
இந்த திருத்தம் செய்யப்படு வதற்கு முன்பு வழக்கறிஞர்கள் சங்க பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக தலைமை நீதிபதி கூறியிருக்கிறார். அதுபோன்ற கூட்டம் நடந்தது. ஆனால், இந்த திருத்தம் குறித்து எதுவும் அதில் தெரிவிக்கப்படவில்லை. எந்தெந்த திருத்தத்தை நீக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தால் அதனை நீதிபதிகள் குழுவுக்கு அனுப்புவதாக தலைமை நீதிபதி கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது.
தவறான புகார் அடிப்படையில் வழக்கறிஞர் தண்டிக்கப்பட்ட பிறகு, விசாரணையில் புகார் நிரூபிக்கப்படவில்லையென்றால் நிவாரணத்துக்கு அவர் யாரை நாடுவது, நீதிமன்ற பணியாளர் கள் தவறு செய்தால் அவர்களைத் தண்டிக்க என்ன வழி? போன்றவை சட்டத் திருத்தத் தில் இடம்பெறவில்லை. இப்பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு வசதியாக மாவட்ட அளவில் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் மாநில குழு ஒன்றை அமைக்க வுள்ளோம். அந்தக் குழு, விதிகளில் திருத்தம் கொண்டு வந்த நீதிபதிகள் குழுவுடன் ஆலோசித்து பிரச்சினையைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளும் என்றார்.