Published : 23 May 2017 11:57 AM
Last Updated : 23 May 2017 11:57 AM

வரலாற்றை தெரிந்து கொள்ள தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டும்: தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தல்

வரலாற்றை தெரிந்து கொள்ள தொல்லியல் சின்னங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் தோன்றிய பவுத்த மதம் அண்டை நாடுகளில் இன்றும் கூட தழைத்தோங்கி உள்ளது. அதேபோல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாகப் புகழ்பெற்றிருந்த சமண சமயம் புலால் உண்ணாமை, அகிம்சையை போதித்தது. சமண துறவிகள் ஊரின் ஒதுக்குப்புறங்களில் இருந்த குகைகளில் தங்கி வாழ்ந்தனர். இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்ற அவர்கள் அங்கே கல்விச் சாலைகள் அமைத்தனர்.

தீர்த்தங்கரர் சிற்பங்கள்

மதுரையை சுற்றியுள்ள திருப்பரங்குன்றம், கீழக்குயில்குடி சமணமலை, கொங்கர் புளியங்குளம், விக்கிரமங்கலம், ஆனைமலை, மாங்குளம், அரிட்டாபட்டி, அழகர்மலை, கருங் காலக்குடி, கீழவளவு, திருவாதவூர், குன்னத்தூர் ஆகிய இடங்களில் சமணர்கள் உருவாக்கிய மலைப்பள்ளிகள் காணப்படுகின்றன. இர ண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி கல்வெட்டுகள், கி.பி. எட்டு, ஒன்பது, பத்தாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டுகள், படுக்கைகள், அக்காலத்தைச் சேர்ந்த தீர்த்தங்கரர் சிற்பங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

சமண சமய வரலாற்றோடு, சமணக்கலை வரலாறு, தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கான அரிய சான்றுகள் இங்கே காணப்படுகின்றன. ஆனால் தொல்லியல் சின்னங்கள் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததால் பழங்கால சிற்பங்களும், கல்வெட்டுக்களும் சேதப்படுத்தப்படுகின்றன. நம் வரலாற்றை தெரிந்து கொள்ள தொல்லியல் சின்னங்களை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மதுரை மண்டல தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் நா.கணேசன் கூறியது: அகழாய்வில் கிடைக்கும் எழுத்துக்கள், பொருட்கள் போன்ற சான்றுகள் அறிவியல் முறையில் ஆய்வு செய்யப்பட்டு ஒரு நாட்டின் கலாச்சாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் காலம் அறிந்து கொள்ளப்படுகிறது. துறவறம் மேற்கொண்ட சமணர்கள் மலைகளில் இருந்த குகைத்தலங்களில் வாழ்ந்தனர். பிறருக்கு அஞ்சி ஓடும் மக்களுக்கு அடைக்கலம் அளித்தனர். பஞ்சத்தாலும், பட்டினியாலும் வந்தவர்களுக்கு உணவளித்தனர். நோயுடன் வந்தவர்களுக்கு நோயை குணப்படுத்தினர். சமண துறவிகள் வாழ்ந்த இடங்களில் அவர்களுக்காக செல்வந்தர்கள், வணிகர்கள் எனப் பலர் படுக்கை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுத்தனர்.

பிராமி தான் எழுத்தின் தொடக்கமாக இருந்த தால் பண்டைய எழுத்துக்கள் தமிழ் பிராமி எழுத்துகளாகவே இருந்தன. அதன் பின்னர் வட்டெழுத்தாக உருமாறியது. படிப்படியாக இன்றைய எழுத்தாக மாறியது.

விழிப்புணர்வு தேவை

மதுரையை சுற்றியுள்ள சமண குகைகள், படுக்கைகளில் சமய நெறி மற்றும் கொடை கொடுத்தவர்களின் விவரம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துக்களை காணும்போது தமிழ் மொழியின் வடிவம், வளர்ச்சி ஆகியவற்றை நம்மால் உணர முடியும். இங்கு பொறிக்கப்பட்டுள்ள சிற்பங்கள், எழுத்துக்களை பார்க்கும்போது 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த சமணர்களை தெரிந்து கொள்ள முடியும்.

இந்த எழுத்துக்களையோ, சின்னங்களையோ அழித்தால் நம் வரலாற்றை நாம் இழந்து விடுவோம். எனவே நம் வரலாற்றை நிலைநாட்டுவதற்கு தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க வேண்டியது மிக அவசியம் என்றார்.

இது குறித்து மதுரை மண்டல தொல்லியல் துறை உதவி இயக்குநர் (பொ) சக்திவேல் கூறும்போது, ஒவ்வொரு தொல்லியல் சின்னங்களின் அருகே அது குறித்த விளக்கங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. அது எந்த காலத்தைச் சேர்ந்தது என்ற விவரமும், சேதப்படுத்தினால் தண்டனை என்ற விவரமும் உள்ளது. அதையும் மீறி சிலர் சேதப்படுத்தவே செய்கின்றனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படாவிட்டால் இதை தடுப்பது மிகவும் கடினம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x