

குன்னம் மற்றும் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்எல்ஏக்களை ஆஜர்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
குன்னம் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி.ராமச் சந்திரன் மற்றும் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா ஆகியோரை காணவில்லை என்றும், அவர்களைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரியும், இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்கவும் வழக்கறிஞர்கள் இளவரசன் மற்றும் ப்ரீத்தா ஆகியோர் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி காஞ்சிபுரம் எஸ்.பி ஜெ.முத்தரசி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘ கூவத்தூர், பூந்தண்டலம் ஆகிய இடங்களில் உள்ள ரிசாட்டுகளில் விசாரணை நடத்தினோம். குன்னம் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் மற்றும் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்எல்ஏ கீதா உள்ளிட்ட 119 எம்எல்ஏக்களும் தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில் அங்கு தங்கியிருப்பதாக தெரிவித்தனர். இதை 2 எம்எல்ஏக்களும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.ஜெய்சந் திரன், டி.மதிவாணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் கே.பாலு, ப்ரீத்தா ஆகியோர் ஆஜராகி, ‘‘கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து தப்பி வந்த எம்எல்ஏ சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வி.கே.சசிகலா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இந்த வழக்கில் எம்எல்ஏக்களை ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்’’ என்று முறையிட்டனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்த கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் வி.எம்.ராஜேந்திரன், ‘‘அதுதொடர்பான விசாரணை தனியாக சென்று கொண்டிருக்கிறது. அதற்கும் இந்த ஆட்கொணர்வு மனுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த ஆட்கொ ணர்வு மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல. வழக்கறிஞர்களே மனுதாரர்களாக மாறி தாக் கல் செய்துள்ளதை அனுமதிக்க முடியாது’’ எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்தனர்