

கூடுவாஞ்சேரியில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற் காக கோயில் மனைகளில் குடியிருப்பவர்களை வெளியேற்றக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் கோயில் களுக்குச் சொந்தமான மனைகளில் பல தலைமுறைகளாக சுமார் இரண்டரை லட்சம் பேர் வசித்து வருகின்றனர். 1999-ம் ஆண்டு முதல் சதுர அடி விலை மதிப்பைக் கொண்டு வாடகை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் கோயில் மனைகளில் குடியிருப்போர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடிமனைதாரர்களின் உரிமை களைப் பறித்து அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பிட்ட காலம் குடியிருந்தால் மனைப் பட்டா வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால், கோயில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கு மட்டும் அநீதி இழைக்கப்படுகிறது.
கோயில் மனைகளில் குடியிருப் பவர்களுக்கு 1999-ம் ஆண்டுக்கு முந்தைய வாடகை முறையை அறிமுகம் செய்ய வேண்டும், கோயில் மனைகளில் குடியிருப் பவர்களை வெளியேற்றக் கூடாது, வீடுகளை பழுதுபார்க்கவும், இடித்துக் கட்டவும் அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை கோயில் மனைகளில் குடியிருப்போர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனை வலியுறுத்தி வரும் 29-ம் தேதி காலை 10 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் கோயில் மனைகளில் குடியிருப்போர் வாழ்வுரிமை மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டை நான் தொடங்கி வைக்கிறேன்.
வண்டலூரில் அமைப்பதாக அறிவித்த புதிய புறநகர் பேருந்து நிலையத்தை கூடுவாஞ்சேரியில் அமைக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக சுமார் 40 ஏக்கர் கோயில் மனைகளில் குடியிருப்பவர்களை அப்புறப்படுத்த அரசு திட்டமிட்டுள் ளதாகக் கூறப்படுகிறது.
பேருந்து நிலையம் அமைப்பதற்காக கோயில் மனைகளில் குடியிருப்பவர்களை தமிழக அரசு வெளியேற்றக் கூடாது. மக்களுக்கு பாதிப்பில்லாமல் வேறு இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். கோயில் மனைகளில் குடியிருப்பவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இதற்காக முதல்வரை நேரில் சந்தித்துப் பேச நேரம் கேட்டுள்ளோம்.
இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போர் சங்கத்தின் தலைவர் வி.அ.பாலசுப்பிரமணி யன், பொருளாளர் எஸ்.ஏழுமலை உள்ளிட்டோர் அப்போது உடனிருந் தனர்.