சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் கத்தியால் குத்திக் கொலை

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஐ.டி. பெண் ஊழியர் கத்தியால் குத்திக் கொலை
Updated on
3 min read

பயணிகள் கண்ணெதிரே பயங்கரம்; தப்பிய இளைஞனுக்கு வலை


*

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் கண்ணெதிரே ஐ.டி. பெண் ஊழியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். குற்ற வாளியைக் கண்டுபிடிக்க ரயில்வே போலீஸார் 5 தனிப்படைகள் அமைத்து தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

சென்னை சூளைமேடு கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தான கோபாலகிருஷ்ணன். மத்திய அரசின் காப்பீடு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகள்கள். இளைய மகள் சுவாதி (24), மறைமலை நகர் மஹிந்திரா டெக் பார்க்கில் உள்ள இன்போசிஸ் ஐ.டி. நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்துவந்தார். திருமணம் ஆகாதவர். தினமும் காலையில் நுங்கம்பாக்கம் சென்று அங் கிருந்து மின்சார ரயிலில் வேலைக் குச் செல்வார். மாலையில் நிறுவனத்தின் வாகனத்தில் வீடு திரும்புவார்.

வழக்கம்போல, நேற்று காலை 6.30 மணி அளவில் சுவாதியை அவரது தந்தை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார். செங்கல்பட்டு மின்சார ரயிலுக் காக காத்திருந்த சுவாதி, 2-வது நடைமேடையில் மகளிர் பெட்டி நிற்கும் இடத்துக்கு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார்.

கடற்கரை மார்க்கத்தில் செல்லும் ரயிலுக்காகவும் நடை மேடையில் ஒருசிலர் காத்திருந் தனர். அப்போது, ரயில் நிலை யத்தின் படி வழியாக ஓடிவந்த ஒருவர், சுவாதிக்கு அருகே சென்றார். கண் இமைக்கும் நேரத்தில், தன் பையில் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து சரமாரியாக சுவாதியைக் குத்திவிட்டு, ஓடி மறைந்தார். சம்பவ இடத்திலேயே சுவாதி, ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். கண் எதிரில் இளம் பெண்ணை ஒருவர் கத்தியால் குத்திவிட்டு ஓடுவதைப் பார்த்த தும், நடைமேடையில் காத்திருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர்.

இதுகுறித்து ரயில்வே போலீ ஸாருக்கு தகவல் அளிக்கப் பட்டது. ரயில்வே எஸ்.பி. விஜயக்குமார், டிஎஸ்பி எம்.ரவிக்குமார் உள்ளிட்ட முக்கிய போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்கிடையில், தகவல் கிடைத்து சுவாதியின் குடும்பத் தினர் பதறியபடி ஓடிவந்தனர். சுவாதியின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். ‘‘நுங்கம் பாக்கம் ரயில் நிலையத்தில் 6.30-க்குதான் இறக்கிவிட்டேன். என் மகள் கொல்லப்பட்டதாக 6.45-க்கு தகவல் வருகிறது. கால்மணி நேரத்துக்குள் இப்படி ஆகிவிட்டதே’’ என்று சுவாதியின் தந்தை கண்ணீர் விட்டு கதறியது அங்கிருந்தவர் களை கண்கலங்க வைத்தது. சுவாதியின் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டது.

25 வயது இளைஞன் யார்?

கொலையை நேரில் பார்த்த சிலர் கூறியதாவது:

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு காலை சுமார் 6.30 மணி அளவில் வந்த பெண் நடைமேடை 2-ல் இருந்த இருக்கையில் உட்கார்ந்திருந் தார். பயணிகள் கூட்டம் அவ்வளவாக இல்லை. அப்போது, சுமார் 5 அடி உயரத்தில் மாநிறம் கொண்ட இளைஞன் ஒருவன் வந்தான். மெல்லிய உடம்பு. சுமார் 25 வயதுக்குள் இருக்கும். பேன்ட், சர்ட் அணிந்திருந்தான். தோள் பட்டையில் பேக் மாட்டியிருந் தான். அந்த பெண் அருகே சென்று இருக்கையில் அமர்ந் தான். தன் பேக்கில் இருந்த பட்டாக் கத்தியால் அந்த பெண்ணை குத்திவிட்டு, கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி விட்டான். அந்த பெண் சத்தம் போட்ட பிறகுதான், அவன் குத்தி யது தெரியவந்தது’’ என்றனர்.

சிசிடிவி இல்லாததால் சிக்கல்

நுங்கம்பாக்கம் ரயில் நிலை யத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாததால், குற்ற வாளியைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மற்ற தடயங்கள் மூலம் குற்றவாளி யைக் கண்டுபிடிக்க ரயில்வே போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். சுவாதியின் கைப்பையில் இருந்த செல்போன் மூலமாக குற்றவாளியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சென்னை கோட்ட ரயில்வே எஸ்.பி. விஜயகுமாரிடம் கேட்டபோது, ‘‘இளம்பெண் சுவாதி கொலை தொடர்பாக பல்வேறு முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளன. விசா ரணையை பாதிக்கும் என்பதால், இதுதொடர்பாக மேலும் எதுவும் கூறமுடியாது. குற்றவாளியைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படை யிலும் 3 முதல் 5 போலீஸ் அதிகாரிகள் இருப்பார்கள். குற்றவாளியை விரைவில் கண்டுபிடிப்போம்’’ என்றார்.

இந்நிலையில் நுங்கம்பாக்கம் ரயில்நிலையம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான சந்தேகத்துக்கிடமான வகையில் சென்ற நபரின் உருவம் ரயில்வே போலீஸ் இணையதளத்திலும், ட்விட்டர் போன்ற சமூக வலை தளங்களிலும் வெளியிட்டப்பட் டுள்ளது. இந்த நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் 1512 என்ற எண்ணுக்குத் தெரியப் படுத்தலாம் என்று ரயில்வே போலீஸார் அறிவித்துள்ளனர்.

இடது : சிசிடிவி கேமராவில் பதிவான உருவம்; வலது: கொலை செய்யப்பட்ட இளம் பெண் ஸ்வாதி.

சுவாதி அமைதியானவர், அறிவாளி, எப்போதும் உற்சாகமாக இருப்பார்- உறவினர்கள், நண்பர்கள் உருக்கம்

சாய்ராம் பொறியியல் கல்லூரியில் படித்தவர் சுவாதி. நல்ல அறிவாளி. மிகுந்த திறமைசாலி. படிப்பில் முழு கவனத்துடன் இருப்பார்.

கல்லூரிகளில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு, திறமையை வெளிப்படுத்தியவர். 2 ஆண்டுகளுக்கு முன்புதான் கல்லூரியில் நடந்த வளாகத் தேர்வு மூலம் இன்போசிஸ் ஐ.டி. நிறுவனத்தில் பணிக்குச் சேந்தார். அமைதியானவர். எப்போதும் உற்சாகமாக இருப்பார் என்று சோகத்துடன் கூறுகின்றனர் சுவாதியின் உறவினர்கள்.

இன்போசிஸ் நிறுவனத்தில் அவருடன் பணியாற்றும் ஊழியர்கள் கூறும்போது, ‘‘மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். அலுவலகத்தில் வேலைகளை உடனுக்குடன் முடித்துவிடுவார். அவரது அறிவாற்றல் வியக்கவைக்கும். பணி தொடர்பான சந்தேகங்களை அவரிடம்தான் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வோம்’’ என்றனர்.

சந்தேக நபரின் வீடியோ:

தமிழ்நாடு ரயில்வே போலீஸார் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் சந்தேக நபரின் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளனர். வீடியோவில் தெரியும் நபர் குறித்த தகவல் தெரிந்தால் பொதுமக்கள் 1512 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in