Published : 31 Dec 2013 01:25 PM
Last Updated : 31 Dec 2013 01:25 PM

தமிழக விவசாயிகளுக்கு இழப்பு: நம்மாழ்வார் மறைவுக்கு வைகோ இரங்கல்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவு, தமிழக விவசாயிகளுக்கு ஈடு செய்யவே முடியாத இழப்பாகும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களால் ஒரு நம்மாழ்வார் பெரும் புகழ் பெற்றார். இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம் போற்றுதலுக்குரிய நம்மாழ்வார், வேளாண்மைக்கும் விவசாய நிலங்களுக்கும் அழிவைத் தர முற்றுகையிடும் மரபணு விதைகள், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் அனைத்தையும் எதிர்த்து, வேளாண் நிலமும் பயிர்களும் நச்சுத்தன்மைக்கு ஆளாகி விடாமல், பாதுகாக்க உண்மையான அறவழிப் வேளாண்மை புரட்சியை தலைமையேற்று நடத்தி, காலத்தால் அழியாத புகழ் படைத்தார்.

வேளாண்மை அறிவியல் பட்டம் பெற்று, கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை மேலாளராக பணிபுரியும் காலத்திலேயே, நஞ்சாகி வரும் வேளாண்மை முறையை எதிர்த்துப் போராட அரசு பணியைத் தூக்கி எறிந்துவிட்டு, இயற்கை வேளாண்மையை நிலைநாட்டும் போராளியானார்.

மீத்தேன் எரிவாயு திட்டத்தால் சோழ மண்டலமே பாழாகிவிடும் ஆபத்தை எதிர்த்துப் போராடினார். உடல்நலம் குன்றிய நிலையிலும் அந்த அறப்போரை மேற்கொள்ளச் சென்ற சூழலில் உயிர் நீத்தார்.

2005 ஆம் ஆண்டு வேடசந்தூரில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் விவசாயிகள் மாநாட்டில், அவர் ஒரு மணி நேரம் ஆற்றிய உரையையும், வழிகாட்டுதலையும் மறக்கவே முடியாது. மதுரையில் நடைபெற்ற அணுஉலை எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் அவரோடு பங்கேற்ற நிகழ்வில், அவரது உன்னதப் பண்புகளைக் கண்டு வியந்தேன்.

அவர் உயிர் இழந்து உடலால் மறைந்தாலும் விவசாயிகளையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்க அவர் தந்த அறிவுரைகளாலும், தொலைநோக்குத் திட்டங்களாலும் நம்மோடு வாழ்கிறார். என்றென்றும் வாழ்வார் நமது மனங்களை ஆளும் நம்மாழ்வார். அவர் ஏந்திய வேளாண்மை லட்சியக் கொடியை உயர்த்தி அவரது கனவுகளை நனவாக்க உறுதிகொள்வோம்

அவரை இழந்து துயரத்தில் துடிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x