

திருச்சியில் காப்பீட்டு துறையில் நேரடி அந்நிய முதலீட்டை எதிர்க்கும் தமிழ் மாநில சிறப்பு மாநாடு நேற்று நடைபெற்றது.
திருச்சியில் காப்பீட்டு துறையில் நேரடி அந்நிய முதலீடு எதிர்ப்பு - தமிழ் மாநில சிறப்பு மாநாடு தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப் பின் துணைத் தலைவர் தர்மலிங்கம் தலைமையில், தஞ்சை கோட்ட பொதுச் செயலர் செல்வராஜ், தென் மண்டல இணைச் செயலர் ஆனந்த செல்வி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் க.சுவாமிநாதன், அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்க இணைச் செயலர் மு.கிரிஜா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
காப்பீட்டு துறையில் நேரடி அந்நிய முதலீட்டின் அளவை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீத மாக அதிகரிக்கும் சட்டத் திருத்த மசோதா நவ.24-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளு மன்றத் தொடரில் நிறைவேற்றப் படவுள்ளதாகவும், அதற்குள் தேர்வுக்குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் எனவும் செய்திகள் வருகின்றன.
எனவே, காப்பீட்டு துறையில் நேரடி அந்நிய முதலீட்டைக் கண்டித்து நவ.14-ம் தேதி தமிழகம் மற்றும் கேரளத்தில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றனர்.
மத்திய அரசு கைவிட வேண்டும்
மாநாட்டைத் தொடக்கி வைத்து சிஐடியு மாநிலத் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான அ.சவுந்தரராஜன் பேசியபோது, “நமது ஆட்சியாளர்கள் அயல்நாட்டு மூலதனம்தான் நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்று, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா தற்சார்புடன் இருக்க உள்நாட்டு முதலீடுதான் வழிவகுக்கும்.
அந்நிய நிறுவனங்களுக்கு 10 முதல் 15 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை, தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கும் அரசுகள், குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு வேலைக்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை விதித்து அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறும் திராணி இல்லாதவையாக உள்ளன.
காப்பீட்டு துறையில் நேரடி அந்நிய முதலீடு திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இல்லையேல் இதற்கான போராட்டங்களில் ஒட்டுமொத்த தொழிற்சங்கங்களும் ஈடுபடும்” என்றார்.