

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் நேற்று மாலை மத்திய இணை அமைச்சர் பொ.ராதாகிருஷ்ணனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை அடுத்து 2 நாள் போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு இரவில் அறிவித்துள்ளார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் அய்யாகண்ணு கூறுகையில், ’அமைச்சர் ராதாகிருஷ்ணனுடன் நேற்று மாலை மீண்டும் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினோம். எங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் சிறிய காலஅவகாசத்துடன் தீர்ப்பதாகவும், வங்கிக்கடன் வசூலுக்காக விவசாயிகளிடம் ஜப்தி நடவடிக்கைகள் செய்வதில்லை என்ற உத்தரவும் மத்திய அரசிடம் பேசி பெற்றுத்தருவதாகக் கூறியுள்ளார். இதற்காக, 2 நாள் எங்கள் போராட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். இது எழுத்துபூர்வமாக கிடைக்கவில்லை எனில், மீண்டும் போராட்டம் தீவிரமடையும். அதுவரை ஜந்தர் மந்திரிலேயே அமைதியாக அமர்ந்திருப்போம்.’ எனத் தெரிவித்தர்.
கடந்த மார்ச் 14 –ல் இருந்து டெல்லியின் ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. வங்கிகடன் ரத்து, வறட்சிக்கானக் கூடுதல் நிவாரணம் மற்றும் காவிரி மேலாண்மை உட்படப் பலவும் அவர்களின் கோரிக்கைகளாக உள்ளன. தலைமுடி, மீசையை மழிப்பது, பாடைகட்டி ஒப்பாரி, எலிக்கறி மற்றும் பாம்பு கறி உண்பது எனப் பல்வேறு வகைகளில் 37 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு தமிழகம் மற்றும் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மற்ற மாநில விவசாய சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் உட்படப் பலரும் நேரில் வந்து ஆதரவளித்து வருகின்றனர். எனினும், கடந்த 37 நாட்களாகத் தொடரும் போராட்டத்தில் விவசாயிகள் இடையே சில நாட்களாக சற்று மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது. இதை உணர்ந்த அய்யாகண்ணு நேற்று மாலை தனது சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தி இருந்தார்.
இதை தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 2 நாள் போராட்டம் நிறுத்தி வைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில், போராட்டக்களத்தை காலி செய்து விட்டு தனது வீட்டில் வந்து தங்குமாறு அமைச்சர் விடுத்த கோரிக்கையை விவசாயிகள் நிராகரித்துள்ளனர்