

பாலியல் வழக்கின் விசாரணையை விரைவில் முடிக்கும் நோக்கத்தில் கீழமை நீதிமன்றங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கையில் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தை சேர்ந்த 39 வயது பெண் கிராம நிர்வாக அலுவரை, அவருடன் பணியாற்றிய ஆண் கிராம நிர்வாக அலுவலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அம்பாசமுத்திரம் மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பெண் விஏவுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதன்படி ஆஜராகாததால் பெண் விஏஓவுக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அந்த பிடிவாரண்ட்டை போலீஸார் செயல்படுத்தவில்லை. இதனால் பெண் கிராம நிர்வாக அலுவலரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடுமாறு மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியருக்கு நீதிபதி கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில் தனக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து செய்யும்படி பெண் விஏஓ உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்ட நாளில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றேன். இதை எனது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தினேன். இருப்பினும் எனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்கு 39 வயதாகிறது. விஏஓவாக பணிபுரிகிறார். அவர் ஒன்றும் குழந்தையல்ல. மனுதாரர் உட்பட சாட்சிகள் 4 பேர் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இதில் நீதிபதி பாரபட்சமாக செயல்பட்டார் எனக் கூற முடியாது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விவரத்தை வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தியதாக தெரியவில்லை. ஒருவேளை அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தால், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு நீதிமன்றம் சென்று பிடிவாரண்ட்டை திரும்பப்பெற கேட்டிருக்கலாம்.
கடுமையான குற்றவாளிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டு கூட மறுஆய்வு செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளது. மனுதாரரை தேடி வீட்டிற்கு சென்ற போலீஸாரை அவர் மிரட்டியுள்ளார். இதனால் நீதிபதி வேறுவழியின்றி ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். எனவே இதை தவறு என்று சொல்ல முடியாது.
பெண்களுக்கு எதிரான வழக்குகளை விரைவில் விசாரிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் சாட்சிகள் ஆஜராகாத நிலையில் சாட்சிகளை ஆஜர்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பது வழக்கமான ஒன்று.
அதுபோல் தான் இந்த வழக்கிலும் மனுதாரரை நீதிபதி எச்சரித்துள்ளார். எனவே மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் உடனடியாக கீழமை நீதிகமனறத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.