

மாரடைப்பு தாக்கம் அறியப்பட்ட வுடன் சம்பந்தப்பட்டவரை உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து, ஒரு மணி நேரத்துக்குள் அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கும் 'கோல்டன் ஹவர்' திட்டம் பரீட்சார்த்த முறையுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் மருத்துவத் துறை யினர் வலியுறுத்துகின்றனர்.
இந்தியா போன்ற வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் உணவுப் பழக்கம், வாழ்வியல் நடைமுறை சார்ந்த பிரச்சினைகள் காரணமாக மாரடைப்பால் இறப் போரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கிறது.
திடீரென சில மணி நேரங்களில் உயிரைப் பறித்து குடும்பத்தை நிராயுதபாணியாக நிறுத்தும் மாரடைப்பு போன்ற நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள அரசால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இது ஒருபுறம் இருந்தாலும், திடீரென மாரடைப்பால் பாதிக்கப் பட்டவருக்கு உடனடி சிகிச்சை வழங்கி காப்பாற்றுவதற்காக 'கோல்டன் ஹவர்' என்ற திட்டத்தை பரீட்சார்த்த முறையில், தமிழக அரசு கொண்டுவந்தது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை, கோவை கே.எம்.சி.எச். ஆகிய இடங்களில் மட்டும் இந்தத் திட்டம் சோதனை (பைலட் லாஞ்ச்) அடிப்படையில் கொண்டு வரப்பட்டது.
ஏதாவது ஓர் இடத்தில், ஒருவருக்கு திடீரென மாரடைப்பு வரும்போது அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனை, சிறிய மருத்துவமனைக்கு கொண்டு சென்று, முதலுதவி மருந்து மற்றும் சிகிச்சை அளித்தவுடன், ஒரு மணி நேரத்தில் நவீன வசதிகள் கொண்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து, 15 மணி நேரத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றுவதே திட்டத்தின் நோக்கம்.
சோதனை அடிப்படையில் 'கோல்டன் ஹவர்' திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்ற போதிலும், முழு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. கடந்த 2 ஆண்டு களாக முடிவு ஏதும் எடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
பிற மாநிலங்களில்..
இந்தத் திட்டத்தை கோவையில் ஒருங்கிணைப்பாளராக ஏற்று செயல்படுத்திய, கே.எம்.சி.எச். இதய சிகிச்சைப் பிரிவு தலைவர் தாமஸ் அலெக்ஸாண்டர் கூறிய தாவது, ''கடந்த 2012 முதல் 2014 ஜூன் வரை, பரீட்சார்த்த நடைமுறையில் திட்டம் செயல் படுத்தப்பட்டது. தமிழகத்தில் சோதனை செய்யப்பட்ட 4 மையங்க ளிலும் 2,400 பேரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது. கோவையில் மட்டும் சுமார் 600 பேரின் உயிரை இந்தத் திட்டத்தின் மூலம் விரைந்து செயல்பட்டதால் காப் பாற்ற முடிந்தது. பரீட் சார்த்த நடைமுறையில் கொண்டு வரப் பட்ட திட்டம் மிகப்பெரும் வெற் றியைப் பெற்றது. இதைப் பார்த்து தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநில அரசுகள், இந்தத் திட்டத்தை முழுமையாகக் கொண்டுவருவதற்கு இறுதிக்கட்ட நடவடிக்கை வரை எடுத்துள்ளன. இருப்பினும், தமிழகத்தில் பரீட் சார்த்த நடைமுறைக்குப் பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டது. அரசுதான் அடுத்தகட்ட முடிவை விரைந்து எடுக்க வேண்டும்''என்றார்.
நிதிச் சிக்கல்?
இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் தமிழ்மணி கூறும் போது, ''இந்தத் திட்டம் பரீட்சார்த்த நடைமுறைக்குப் பின்னர் நிறுத்தப் பட்டுள்ளதற்கு நிதிச் சிக்கலும் ஒரு காரணம். திட்டத்தை செயல் படுத்துவது குறித்து பரிந்துரைக் கப்பட்டுள்ளது'' என்றார்.