Published : 14 Jun 2017 08:04 AM
Last Updated : 14 Jun 2017 08:04 AM

வீடுகள், குடியிருப்புகள் விலை உயரும் அபாயம்: பத்திரப்பதிவு கட்டணத்தை மீண்டும் 1 சதவீதமாக குறைக்க வேண்டும் - ‘கிரெடாய்’ சென்னை தலைவர் சுரேஷ் கிருஷ்ணன் வலியுறுத்தல்

தமிழகத்தில் பத்திரப்பதிவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் வீடுகள், குடியிருப்புகள் விலை உயரும் அபாயம் உள்ளது. எனவே, கட்டண உயர்வை மீண்டும் 4 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் சங்கங்கள் கூட்டமைப்பின் (கிரெடாய்) சென்னை தலைவர் சுரேஷ் கிருஷ்ணன் கூறினார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் சுரேஷ் கிருஷ்ணன் நேற்று கூறியதாவது:

நில வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதை வரவேற் கிறோம். அதேநேரம், பத்திரப்பதிவு கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டி ருப்பது எதிர்பார்த்த பலனைத் தராது.

நிலத்தின் மதிப்பும், கட்டிட மதிப்பும் சேர்த்தே கணக்கிடப்படும். அவ்வாறு கணக்கிடும்போது வழிகாட்டி மதிப்பு குறைவாக இருந்தாலும், பதிவுக் கட்டணம் அதிகமாக இருப்பதால் புதிய வீடுகள், குடியிருப்புகளின் விலை உயரும். அதாவது ஒரு சதுரஅடி விலை ரூ.30 வரை அதிகரிக்கும்.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் பத்திரப்பதிவுக் கட்டணம் 4 சதவீதமாக உள்ளது. மற்ற மாநிலங்களில் 1 சதவீதம் முதல் 3.5 சதவீதம் மட்டுமே உள்ளது. பதிவுக் கட்டண உயர்வால் வீடுகள் விலை உயரும் அபாயம் இருப்பதால், அந்த அறிவிப்பை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ரியல் எஸ்டேட் துறை, வாடிக்கையாளர்கள் மீது இந்த கட்டண உயர்வு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் பத்திரப்பதிவுக் கட்டணத்தை ஏற்கெனவே இருந்ததுபோல 1 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.

மணல் தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரூ.35 முதல் ரூ.40 வரை விற்கப்பட்ட ஒரு கனஅடி மணல் தற்போது ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கிறது. இவ்வளவு அதிக விலை கொடுத்தாலும் மணல் கிடைப்பதில்லை. அதனால் சுமார் 1 கோடி சதுரஅடி பரப்பளவில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மணலுக்கு மாற்றாக கருதப்படும் ‘எம்-சாண்ட்’கூட போதிய அளவு கிடைக்கவில்லை. எனவே, இப்பிரச்சினைக்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சந்திப்பின்போது, இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) சென்னை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டபிள்யூ.எஸ்.ஹபிப், செயலாளர் சிவகுருநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x