Published : 25 Apr 2017 07:38 AM
Last Updated : 25 Apr 2017 07:38 AM

உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்நோக்கும் உயர் நீதிமன்றம்: உள்ளாட்சி தேர்தல் ஜூலைக்குள் நடக்குமா? - வழக்கு விசாரணை ஜூலை 14-க்கு தள்ளிவைப்பு

தமிழக உள்ளாட்சித் தேர்தல் ஜூலைக்குள் நடக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பான வழக்கு விசார ணையை உயர் நீதிமன்றம் ஜூலை 14-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

தமிழக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபரில் 2 கட்டங்களாக நடத்தப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டது. இதில் பழங்குடியினருக்கு முறை யாக இடஒதுக்கீடு அமல்படுத்தப் படவில்லை என்று கூறி உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து உத்தர விட்டார். அத்துடன், குற்றப் பின்னணி உள்ளவர்கள் போட்டியிடத் தடை விதிக்கும் வகையிலும், இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை போன்ற பணிகளை முறையாக செய்து, டிசம்பர் 30-க்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு, உள்ளாட்சி தேர்தலை மே 14-க்குள் நடத்த உத்தரவிட்டது.

‘இந்திய தேர்தல் ஆணையத் தின் வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக்கொண்டு, உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடப்பதால், மே 14-க்குள் தேர்தலை நடத்த இயலாது. ஜூலை இறுதிக்குள் நடத்த அவகாசம் தரவேண்டும்’ என்று மாநில தேர்தல் ஆணையம் கோரியது. இதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதன்படி மாநில தேர்தல் ஆணைய செயலாளர் டி.எஸ்.ராஜசேகர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘ஜூலை இறுதிக்குள் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. ஆனால், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுப் படி இடஒதுக்கீடு போன்ற நிபந்தனைகளை தமிழக அரசு சட்டப்பூர்வமாக செய்து முடிக்க வேண்டியுள்ளது. அவை நிறை வடைந்தால்தான் தேர்தலை நடத்த முடியும்’’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், நீதிபதிகள் ஹூலுவாடி ஜி. ரமேஷ், ஆர்எம்டி டீக்காராமன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மாநில தேர்தல் ஆணை யம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.குமார், ‘‘2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்து இடஒதுக் கீடு வழங்குவது தொடர்பாக திமுக தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த விசாரணையின்போது, ஜூலை இறுதிக்குள்தான் தேர்தல் நடத்த முடியும் என நாங்கள் கூறியதை பதிவு செய்துகொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அந்த வழக்கு விசாரணையை ஜூலை 12-க்கு தள்ளிவைத்துள்ளனர்’’ என்றார்.

இதையடுத்து, ‘‘உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 14-க்கு தள்ளிவைக்கிறோம். அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில்தான் இந்த வழக்கை விசாரிக்க முடியும்’’ என்று நீதிபதிகள் கூறினர்.

இதுதொடர்பாக பிற்பகலில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘ஜூலைக்குள் தேர்தலை நடத்துவதாக மாநில தேர்தல்ஆணையமே பிரமாணப் பத்திரம் அளித்துள்ளது. உச்ச நீதிமன்ற வழக்குக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இதுதொடர்பாக விரிவாக வாதிடத் தயாராக உள்ளேன். எனவே இந்த வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், அதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த சூழலில், தமிழக உள்ளாட்சித் தேர்தல் ஜூலைக்குள் நடக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x