Published : 27 Feb 2017 10:23 AM
Last Updated : 27 Feb 2017 10:23 AM

மனம்விட்டுப் பேசினாலே குடும்பப் பிரச்சினைகளை தீர்க்கலாம்: நெல்லையில் நடைபெற்ற ‘தி இந்து பெண் இன்று’ மகளிர் திருவிழாவில் நீதிபதி விளக்கம்

"மனம் விட்டு பேசினாலே குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து விடலாம்" என, `தி இந்து - பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில், திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற மகளிர் திருவிழாவில், திருநெல்வேலி சார்பு நீதிபதி ஜெ.தமிழரசி பேசினார்.

`தி இந்து’ தமிழ் நாளிதழுடன் ஞாயிற்றுக்கிழமை தோறும் டேப்ளாயிட் வடிவில் 16 பக்க வண்ண இணைப்பாக `பெண் இன்று’ வெளியாகிறது. இதன் சார்பில், தமிழகத்தின் பல்வேறு நகரங் களில் மகளிர் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. நெய்வேலி, மதுரை, திருச்சி, ஈரோட்டை தொடர்ந்து, திருநெல்வேலியில் வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி அரங்கில் இவ்விழா நேற்று நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான ஜெ.தமிழரசி, குத்துவிளக் கேற்றி விழாவைத் தொடங்கி வைத்து பேசியதாவது:

பெண்களுக்கு சமுதாயத்தில் நிறைய உரிமைகள் இருக்கின்றன. அவர்களைக் காக்க ஏராளமான சட்டங்கள் இருக் கின்றன. எனினும், விழிப்புணர்வு இருந் தால் மட்டுமே இச்சட்டங்கள் பெண்களைப் போய்ச் சேரும். இந்த விழிப்புணர்வுப் பணியை இலவச சட்ட உதவி மையம் செய்து வருகிறது.

ஏழை மக்களுக்கு உதவுவதற்காகவே, அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தால் இலவச சட்ட உதவி மையங்கள் அமைக்கப்பட்டன. நீதிமன்றங்கள் எங்கெல்லாமல் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் இந்த மையங்கள் செயல்படுகின்றன.

மண வாழ்க்கையில் பிரச்சினை, சொத்து உரிமையில் பிரச்சினை, குழந்தை களை பராமரிப்பது தொடர்பான பிரச்சினை என, எந்தப் பிரச்சினையானாலும், போலீஸ் நிலையத்துக்கோ, நீதிமன்றத் துக்கோ செல்லாமல், சமரசமாக தீர்வு காண விரும்புவோர் இந்த மையங் களை அணுகலாம். இங்கு, இரு தரப்பை யும் அழைத்து, சட்டப்படி பேசி, ஆலோ சனைகள் வழங்கி, பிரச்சினைகளுக்கு சுமூகமாக தீர்வு காண்கிறோம். குடும்பப் பிரச்சினைகளை மனம் திறந்து பேசினாலே தீர்வு கிடைக்கும்.

குடும்பங்களில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளில் இருந்து பெண் களை பாதுகாக்கும் நோக்கத்தில் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம்-2005 கொண்டு வரப்பட்டது. கணவர் மற்றும் ஆண்களின் தாக்குதல், துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாப்பு பெறும் உத்தரவு, கணவர் வீட்டில் வாழும் உரிமை பெறும் உத்தரவு, குழந்தைகளை நம்மிடமே வைத்துக் கொள்ள உத்தரவு, பாலியல் துன்புறுத் தலில் இருந்து பாதுகாப்பு, சொத்துகளை பெறும் உரிமை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிதி உதவி, நிவாரண உதவி போன்றவற்றை பெற வழிவகை உள்ளது.

அதேநேரத்தில், இச்சட்டத்தை பெண் கள் தவறாக பயன்படுத்தி, தங்களுக்கு வேண்டாதவர்களை பழிதீர்க்க நினைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தவறாக பயன்படுத்தும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலியல் பலாத்காரத்தால் பாதிக் கப்படும் பெண்கள், ஆசிட் வீச்சில் பலியாகும் பெண்கள் என ஒவ்வொரு நிகழ்வுக்கும் ரூ. 3 லட்சம் வரை நிவா ரணம் வழங்க வழிவகை உள்ளது. இந்த நிவாரணத்தையும் இலவச சட்ட உதவி மையம்தான் பெற்றுக் கொடுக்கிறது என்றார்.

திருநெல்வேலியைச் சேர்ந்த முதல் தலைமுறை தொழில்முனைவோர் ஹேமா குமரன் பேசியதாவது:

ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருக்கிறார் என்பதே உண்மை. சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு கணவனின் உதவி இருந்தால் எந்தவிதத் தடையையும் மீறி வெற்றிபெற முடியும். எனக்கு அதுபோன்ற ஒரு வாய்ப்பு கிடைத்ததால், பெண்களின் நவீன ஆடையக வர்த்தகத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். கனவுகளை நிஜமாக்கும் சக்தி ஒவ்வொரு பெண்களுக்கும் உண்டு. மன உறுதி இல்லாமல் தொழிலை முன்னேற்ற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

‘தி இந்து’ இணைப்பிதழ்களின் ஆசிரியர் டி.ஐ.அரவிந்தன் பேசியதாவது:

மனித இனத்தில் ஆணும், பெண்ணும் உடற்கூறு, உயிரியல் ரீதியான அம்சங் களைத் தாண்டி சமமான உயிர்கள்தான். ஆனால், சம பங்குக்கு ஏற்ற இடம் கிடைக் கிறதா என எண்ணும் நிலைதான் உள்ளது.

வியாபாரத்திலும், போரிலும், சூதாட் டத்திலும் பெண்களை பகடைக்காயாக பயன்படுத்தியது, சரித்திரத்தில் அரங் கேறியுள்ளது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இது தவறு என்ற விழிப்புணர்வு ஏற்பட்டது. பெருமளவு பெண்களும், ஓரளவு ஆண்களும் இதற்காக உழைத்ததன் வெளிப்பாட்டால் தற்போது சமத்துவம் மலர்ந்துள்ளது. பெண்களுக்கு வாக்குரிமை, சொத்துரிமை கிடைத்தது இதன் பிறகுதான்.

இப்போதும்கூட ஒரே பணியைச் செய் யும் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமான ஊதியம் இல்லை. சமத்துவம் கிடைக்க பெருமளவில் முயற்சி நடந்து வந்தாலும் இன்னும் முழுமை பெறவில்லை.

பெண்களுக்காக இன்று ஏராளமான இதழ்கள் வருகின்றன. சமையல், அழகு, குடும்பம் ஆகியவற்றை மட்டுமே முக்கியமாகக் கொள்ளாமல், பன்முக பரிமாணம் கொண்டவர்களாக பெண் களை மாற்றும் வண்ணம், அவர்களது வாழ்வியலை தாங்கி ‘தி இந்து - பெண் இன்று’ இதழ் வருகிறது. இதற்கு வாசகர் களின் ஆதரவு அபாரமாக உள்ளது. இணைப்பிதழ்களில் முதலாவதாக தன்னை இரட்டிப்பாக்கிக் கொண்டதும் `பெண் இன்று’ இதழ்தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

பாளையங்கோட்டை மகாராஜநகர் ஜெயேந்திரா கலாகேந்திரா மாணவியரின் வரவேற்பு பரதநாட்டியம், மகாராஜநகர் ஜெயேந்திரா வெள்ளிவிழா பள்ளி மாணவியரின் கண்கவர் நடனம், மவுன நாடகம் ஆகியவை காலை நிகழ்ச்சிகளுக்கு உற்சாகமூட்டின.

`பெண்ணுக்குத் தேவை பொன் நகையா? புன்னகையா?’ என்ற தலைப்பில் கலகலப்பான பேச்சரங்கம், கிருத்திகா கணேஷ் தலைமையில் நடைபெற்றது. `பொன்னகை’ என்ற தலைப்பில் சீதா பாரதி, `புன்னகை’ என்ற தலைப்பில் மீனாட்சி நடராஜன் ஆகியோர் பேசினர். `புன்னகை இருந்தால்தான் பெண்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்’ என்று, நடுவர் இறுதியில் பேசி கலகலப்பூட்டினார்.

பெருமாள்புரம் லேடீஸ் கிளப் அங்கத் தினர்கள் வயதுக்கு அப்பாற்பட்டு ஆடிய கோலாட்ட நடனம் பார்வையாளர்களை ஈர்த்தது. காலை நிகழ்ச்சிகளை பார்வதி முத்தமிழ் தொகுத்து வழங்கினார். மதியம் சுவையான உணவு வழங்கப்பட்டது.

பிற்பகல் முதல் மாலை 6 மணி வரை யிலும், கலை நிகழ்ச்சிகள், போட்டிகளால் விழா அரங்கம் களைகட்டியது. திருநெல் வேலி சாரதா கல்லூரி மாணவியரின் பறையாட்டம் அரங்கை அதிர வைத்தது. கோலாட்டம், வில்லுப்பாட்டு, கரகாட்டம், மிமிக்ரி என்று இக் கல்லூரி மாணவியர் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

மகளிரின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பால் பாஸிங், மிஸ் ஞாபக சக்தி, மைமிங், பொட்டு ஒட்டும் போட்டி, கோலி விளையாட்டு, ரப்பர்பேண்ட் மாலை உருவாக்குதல், கோலப்போட்டி என்று பல போட்டிகள் நடத்தப்பட்டு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. 4 பம்பர் பரிசுகள், 10 உடனடி போட்டிகள், 10 ஆச்சர்ய பரிசுகள் என்று விழா அரங்கமே பரிசு மழையில் நனைந்தது. மாலை நிகழ்ச்சிகளை சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா தொகுத்து வழங்கினார்.

இவ்விழாவை, `தி இந்து’ தமிழ் நாளிதழுடன், லலிதா ஜூவல்லரி, தி சென்னை சில்க்ஸ், பொன்மணி வெட்கிரைண்டர், ஆரெம்கேவி, ஸ்பிக்டெக்ஸ், மைட்ரீம்ஸ், ஆப்பிள் குக்வேர், கரூர் ஹெச் டூ ஹெச் ஆரஞ்ச் இம்பெக்ஸ், தங்கமயில் ஜூவல்லரி, செப்ரானிக்ஸ், நேகாஸ் பேக்ஸ், எஸ்ஏவி மசாலா, காஜா குரூப், ஹோட்டல் அப்னா, ஹோட்டல் பானு பிருந்தாவன், எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து வழங்கின.

வாசகிக்கு உடனடி தீர்வு

நிகழ்ச்சிக்கு வந்திருந்த வாசகி ஒருவர், நெல்லை சார்பு நீதிபதி தமிழரசியை சந்தித்து, தன் பிரச்சினைக்கு தீர்வு கோரினார். அவருக்கு உரிய வழிமுறைகளை நீதிபதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x