

எட்டயபுரத்துக்கு நேற்று வந்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோரை பாரதியார் வேடமணிந்த மாணவ, மாணவியர் வரவேற்றனர். திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு வ.உ.சி. பெயர் சூட்டுவது குறித்து, ரயில்வே அமைச்சருடன் கலந்தாலோசிக்கப்படும் என, அமைச்சர் உறுதி கூறினார்.
மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுதந்திர போராட்டத் தியாகிகளின் நினைவிடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டைக்கு வந்த அவருக்கு, ஒயிலாட்டம், தேவராட்டம், சிலம்பாட்டம் போன்ற பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகளுடன் அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசு ஜெகவீரபாண்டிய கட்டபொம்மு துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி. இல்லத்துக்கு சென்ற வெங்கய்ய நாயுடு வுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. எட்டயபுரத்தில் பாரதியார் இல்லம், பாரதியார் மணிமண்டபம் ஆகிய இடங்களுக்கு அவர் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பாரதியார் மணிமண்டபத்தில், எட்டயபுரம் மாரியப்ப நாடார் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பாரதியார் வேடமணிந்து, வெங்கய்ய நாயுடு உள்ளிட்டோரை வரவேற் றனர். அப்போது மாணவ, மாணவியருடன் சேர்ந்து வந்தே மாதரம் பாடினார்.
வ.உ.சி. பெயர்
எட்டயபுரத்தில் செய்தியாளர் களிடம் அவர் பேசும்போது, `திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு வ.உ.சி. பெயர் சூட்டப்படுமா?’ என, செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வெங்கய்ய நாயுடு, ‘இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுடன் கலந்து ஆலோசிக்கப் படும்’ என்றார்.
வீரன் சுந்தரலிங்கனார்
ஓட்டப்பிடாரம் வ.உ.சி. இல்லத்தில் வீரன் சுந்தரலிங்கனார் வழித்தோன்றல்கள் வெங்கய்யநாயுடுவை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், ‘வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதியான வீரன் சுந்தரலிங்கனார் ஆங்கிலே யர் களின் ஆயுதக் கிடங்கை அழித்த முதல் தற்கொலை படைத் தலைவர். அவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். அவரது வரலாற்றை, பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.