Published : 03 Jan 2017 03:26 PM
Last Updated : 03 Jan 2017 03:26 PM

உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும்: வாசன்

தமிழக அரசும், தமிழக தேர்தல் ஆணையமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமாகா தலைவர் வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பதவிகளுக்கான பதவிக் காலம் கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முடிவடைந்தது.

தற்போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அப்பதவிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பணிபுரிந்து வருகிறார்கள். இது ஒரு இடைக்கால ஏற்பாடாகும். ஆனாலும் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தி மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் தமிழகம் முழுவதும் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

குறிப்பாக கிராமம் முதல் நகரம் வரை உள்ள சாலைகள், தெருக்கள், தெரு விளக்குகள், தண்ணீர் தொட்டிகள், கை பம்புகள், குடிநீர் வசதிகள், கழிப்பிட வசதிகள் போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும்.

மேலும் தற்போது கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளதோடு, கிராமப்புற வளர்ச்சியும் தடைபட்டுள்ளது. இதனையும் கவனத்தில் கொண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்திட வேண்டும்.

எனவே தமிழக அரசு சட்டப்படியும், அனைத்து அரசியல் கட்சிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றும், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு உட்பட அனைத்துவிதமான இட ஒதுக்கீட்டிலும் உள்ள சதவீதத்தை முழுமையாக கடைபிடித்து, சட்டத்திற்கு உட்பட்டு தமிழக அரசும், தமிழக தேர்தல் ஆணையமும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் தமிழக தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் குறுக்கீடுகள் இல்லாத வகையில், ஜனநாயக ரீதியில், சட்டத்திற்கு உட்பட்டு, நேர்மையாக, முறையாக, சரியாக தேர்தலை விரைவில் நடத்திட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

தமிழகத்தின் வளர்ச்சி என்பது கிராமப்புற வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. மேலும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தேர்தலை நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளை கொண்டு மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பொறுப்பில் இருப்பதால் நிர்வாகத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து முடிவு எடுப்பதற்கு கால தாமதம் ஆகும். இதனைக் கருத்தில் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளை தேர்தல் நடைபெற்ற பிறகு தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைப்பதன் மூலம் பஞ்சாயத்து ராஜ்ஜியம் நிலைநாட்டப்பட வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x