Published : 30 Aug 2016 01:09 PM
Last Updated : 30 Aug 2016 01:09 PM

முற்போக்கு கலை இலக்கிய மேடைகளில் ஒலித்த குரல்: திருவுடையானுக்கு வைகோ புகழஞ்சலி

சாலை விபத்தில் பலியான பாடகர் திருவுடையான் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கரன்கோவில் நகரச் செயலாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளருமான திருவுடையான் விபத்தில் சிக்கி உயிர் இழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

மிக எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்து தொழிலாளியாக இருந்தபோதே இசை ஆர்வம் கொண்டு, பாடும் பயிற்சியைத் தாமாகவே வளர்த்துக் கொண்டார். தபேலாவையும் இசைத்துக்கொண்டே பாடுவது இவரது தனித்திறமை. இத்தகைய கலைஞர்கள் வெகு சிலரே. முற்போக்குக் கலை இலக்கிய மேடைகளில் தமிழகம் முழுவதும் இவரது குரல் ஒலித்தது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் மதிமுக வேட்பாளருக்காகத் திருவுடையான் அரும்பாடுபட்டு உழைத்தார். கலிங்கப்பட்டி இல்லத்திற்கு வந்து என்னைச் சந்தித்து இருக்கின்றார். சிறந்த ஓவியரான திருவுடையான் வரைகின்ற விளம்பரத் தட்டிகள் வழக்கமான முறையில் அல்லாமல் புதுமையாக ஒரு செய்தியைத் தாங்கி நிற்கும். அதைப் பலமுறை கவனித்து இருக்கின்றேன்.

சங்கரன்கோவில் நகரில் தொழிலாளர்களுக்காக அவரது குரல் ஒலித்து வந்தது. இன்னும் எத்தனையோ காலம் தொண்டு ஆற்ற வேண்டிய திருவுடையானை, எதிர்பாராத விதமாக இயற்கை பறித்துக் கொண்டது. இன்றைய அரசியல் சூழ்நிலையில், தன்னலம் சிறிதும் இன்றி பொதுவாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு உழைத்த திருவுடையானைப் போல ஒருவரைக் காண்பது அரிது. இத்தகைய தொண்டர்கள் உருவாவது கடினம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது, இவரது இல்லம் அமைந்து இருக்கின்ற தெருவில் நான் வாக்கு கேட்டுச் சென்றபோது, குடும்பத்தோடு திரண்டு நின்று வரவேற்றனர். இவரது தந்தையார் எனக்குக் கைத்தறி ஆடை அணிவித்து அன்போடு வாழ்த்தியது பசுமையாக நினைவில் இருக்கின்றது.

திருவுடையானை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் மதிமுக சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த விபத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருக்கின்ற திருவுடையானின் தம்பி தண்டபாணியும் நான் உரை ஆற்றிய மேடையில் பாடி இருக்கின்றார். அவரும், ஓட்டுநர் தம்பி தங்கப்பாண்டியனும் விரைவில் முழுநலம் பெற்றுத் திரும்ப விழைகிறேன்'' என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x