

தமிழகத்தில் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 19-ம் தேதி நடக்கிறது. 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க, 40 ஆயிரம் மையங்கள் அமைக்கப்படுகிறது. போலியோ சொட்டு மருந்து கிடைக்கவில்லை என்றால் 104 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் என்ற போலியோவை ஒழிக்க ஆண்டுதோறும் இரண்டு தவணைகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லை. இதனை தொடர்ந்து போலியோ இல்லாத நாடாக இந்தியாவை உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி - மருத்துவமனைகள், பள்ளிகள் என முக்கிய இடங்களில் 40 ஆயிரம் போலியோ சொட்டுமருந்து முகாம்கள் அமைக்கப்படுகின்றன.
சிறப்பு மையங்கள்:
இவை தவிர பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், திரையரங்குகள், கோயில்கள், தேவாலயங்கள், கடற்கரைகள், பூங்காக்கள் போன்ற இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும் தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க நடமாடும் குழுக்களை சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, கல்வித்துறை, வருவாய் துறை, ரோட்டரி கிளப், லையன்ஸ் கிளப் மற்றும் தன்னார்வலர்கள் என மொத்தம் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர்.
இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் கே.குழந்தைசாமி கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த குழந்தை யும் போலியோவால் பாதிக்கப்பட வில்லை. இதன் மூலம் தமிழகம் போலியோ இல்லாத மாநிலமாக திகழ்கிறது. இந்த ஆண்டு முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 19-ம் தேதி நடக்கிறது. மேலும் பேருந்து, ரயில், விமான நிலையங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தையின் கை விரவில் அடையாளத்திற்கு மை வைக்கப்படும்.
விடுபடும் குழந்தைகளுக்கு அடுத்த 2 நாட்களில் வீடுகளுக்கே சென்று போலியோ சொட்டு மருந்தை சுகாதாரத்துறை ஊழியர் கள் வழங்குவார்கள்.
இந்த ஆண்டு முதல் முறையாக தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட் பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கிறோம். அதே போல போலியோ சொட்டு மருந்து விடுபட்ட குழந்தையின் பெற்றோர் மற்றும் எந்த பகுதி யிலாவது போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை என்றால் உடனடியாக 104-க்கும் போன் செய்து தகவல் கொடுக்கலாம். இதையடுத்து, உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதியில் விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னையில் 5 வயதுக்குட்பட்டு சுமார் 6 லட்சம் குழந்தைகள் இருப்பதாக தெரிகிறது. இந்த குழந்தைகளுக்கு மாநகராட்சி சார்பில் போலியோ சொட்டு மருந்து போடப்படும். இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 23-ம் தேதி நடைபெறும்.