

இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே. நகரில் போலீஸார் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். முதல் கட்டமாக பிரபல ரவுடி காக்காத் தோப்பு பாலாஜி உட்பட 35 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் பின்னணி கொண்ட 110 பேர் தொகுதியை விட்டு வெளி யேற்றப்பட்டுள்ளனர்.
சென்னை ஆர்.கே நகர் தொகு திக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. அங்கு திமுக, அதிமுக அம்மா, அதிமுக புரட்சித் தலைவி அம்மா, பாஜக, தேமுதிக, நாம் தமிழர், மார்க்சிஸ்ட், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என 8 முனை போட்டி நிலவுகிறது. இந்தக் கட்சிகளின் வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தம் 62 பேர் களத்தில் உள்ளனர்.
தேர்தலையொட்டி தொகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு களை சென்னை மாநகர காவல் ஆணையர் கரன் சின்ஹா மேற் பார்வை செய்து வருகிறார். வட சென்னை கூடுதல் காவல் ஆணை யர் சாரங்கன் தலைமையில் வண் ணாரப்பேட்டை துணை ஆணையர் ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் ரோந்துப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். அரசியல் கட்சியினர் போர்வையில் ரவுடிகள் பலரும் தொகுதிக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை போலீ ஸார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ரவுடிகளை அடையா ளம் காணவும், உள்ளூர் ரவுடி களை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், நேற்று காலை வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந் தனர். அப்போது, நிற்காமல் சென்ற காரை விரட்டிப் பிடித்தனர். காருக் குள் இருந்த பிரபல ரவுடி காக்காத் தோப்பு பாலாஜி, அவரது கூட்டாளி கள் கீழ்பாக்கம் பிரேம்குமார் (32), திருவாரூர் சம்பந்தம் (54) ஆகி யோரை துப்பாக்கி முனையில் போலீஸார் கைது செய்தனர். இதே போல குற்றப் பின்னணி கொண்ட மேலும் 32 பேர் என மொத்தம் 35 ரவுடிகளை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத் துள்ளனர்.
அத்துடன் ஆர்.கே நகர் தொகுதியைச் சேர்ந்த குற்றப் பின்னணி கொண்ட 110 பேர், ‘நாங்கள் எந்த குற்றச் சம்பவங் களிலும் ஈடுபட மாட்டோம்’ என போலீஸாரிடம் எழுதிக் கொடுத்துள் ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் ஆர்.கே நகர் தொகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர். வாக்குப் பதிவு முடியும்வரை தொகுதிக்குள் நுழையக் கூடாது என அவர்களை போலீஸார் எச்சரித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட காக்காத் தோப்பு பாலாஜி மீது 5 கொலை வழக்கு மற்றும் கட்ட பஞ்சாயத்து, மிரட்டுதல், ஆள் கடத்துதல் உட்பட 53 வழக்குகள் உள்ளதாகவும், 9 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.