

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஜவ்வாது மலைத் தொடரில் சிறியதும் பெரியதுமாக 180-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கிராம மக்கள் கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியுள்ளனர்.
அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் முயற்சியால் முதல் தலைமுறையாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண் ணிக்கை ஆண்டுதோறும் அதி கரித்துவருகிறது. ஆனால், இங் குள்ள பள்ளிகள் பல தரம் உயர்த் தாமல் இருப்பதால் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஜமுனாமரத்தூர் அடுத்துள்ள அரசுவெளி என்ற கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நலத்துறை சார்பில் உண்டு உறைவிட தொடக்கப் பள்ளி செயல்படுகிறது. இங்கு 172 மாணவ, மாணவிகள் படிக் கின்றனர். மலைக் கிராமத்தில் உள்ள 24 பள்ளிகளில், அரசுவெளி கிராமத்தில் உள்ள பள்ளி மட்டும் கடந்த 8 ஆண்டுகளாக முன்மாதிரிப் பள்ளியாக செயல்படுகிறது.
இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த 23 மாணவர் கள் ஆறாம் வகுப்பில் சேராமல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டனர். இந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கையைப்போல, படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர் களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
6-ம் வகுப்பில் சேர அவதி
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறும்போது, இந்தப் பள்ளியில் 27 மலைக் கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படிக்கின்ற னர். 150 மாணவர்கள் விடுதியில் தங்கியுள்ளனர்.
இங்கு படிக்கும் மாணவர்கள் 6-ம் வகுப்பு படிக்க 5 கி.மீ தொலைவில் உள்ள குனி காந்தனூரில் உள்ள தொண்டு நிறு வனப் பள்ளிக்குச் செல்லவேண்டும்.
அந்தப் பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் குடியாத்தம், வேலூர், பள்ளி கொண்டா, ஒடுகத்தூர், அணைக்கட் டுக்குச் செல்ல வேண்டும். அங்கும் விடுதியில் இடம் கிடைத்தால் மட்டும் படிக்க முடியும். 11 வயதுள்ள பெண் பிள்ளைகளை விடுதியில் தங்கிப்படிக்க வைக்க பெற்றோர் அச்சப்படுகின்றனர். இதனால், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே, அரசுவெளி தொடக் கப் பள்ளியை நடுநிலைப் பள்ளி யாக தரம் உயர்த்த வேண்டும். இதற்காக, கடந்த 3 ஆண்டுகளாக அனைத்து அரசுத் துறை அதிகாரி களுக்கும் மனு அளித்தோம். 50 மாணவர்களின் எண்ணிக்கைக்கும் குறைவாக இருக்கும் கோவிலாந் தூர், பட்டரைக்காடு, ஆத்தியானூர் மற்றும் ஊர்கவுண்டனூர் பள்ளி களை தரம் உயர்த்தி உள்ளனர். எங்கள் பள்ளியை புறக்கணித்து விட்டனர்.
இந்தப் பள்ளியில் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து 100-க் கும் அதிகமான மாணவர்கள் படிக்கிறார்கள். நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தவில்லை என்றால் 27 கிராமங்களில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும்” என்றனர்.