Published : 25 Jan 2014 12:00 AM
Last Updated : 25 Jan 2014 12:00 AM

நியாயம் கேட்டால் நீக்குவதா? திமுகவில் ஜனநாயகம் இல்லை: மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி

‘நியாயம் கேட்டதால் என்னை நீக்கிவிட்டனர். திமுகவில் ஜனநாயகம் இல்லை’ என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.

திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து ‘தி இந்து’வுக்கு அழகிரி வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

திமுகவில் இருந்து நீக்கப் பட்டது குறித்து என்ன சொல்கிறீர்கள்?

திமுகவில் இருந்து ஜனநாயகம் சென்றுவிட்டது. கட்சிக்காக உழைத்தவர்களை எந்த அடிப்படையும் இன்றி நீக்கியது சரியா என நியாயம் கேட்கச் சென்றேன். அதற்காக என்னையும் நீக்கி விட்டார்கள்.

நீங்கள் கருணாநிதியிடம் உரத்த குரலில் பேசியதால்தான், கோபத்தில் உங்களை நீக்கிய தாகச் சொல்கிறார்களே?

உரத்தக் குரலில் பேசக் கூடாதா? திமுகவில் ஜனநாயகம் இல்லையா? நியாயம் கேட்க எனக்கு உரிமை இல்லையா?

இந்த நடவடிக்கைக்கு யார் காரணம் என நினைக்கிறீர்கள்?

தலைவரும், பொதுச் செயலாளரும் பொருளாளர் ஸ்டாலின் சொல்வதைத்தான் கேட்கிறார்கள். எனக்கு தென் மண்டல அமைப்பாளர் பதவியைக் கொடுத்துவிட்டு, என்னிடம் எதையும் கேட்காவிட்டால் எப்படி?

ஸ்டாலினுக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சினை உள்ளதா?

தனிப்பட்ட முறையில் ஒரு பிரச்சினையும் இல்லை. கட்சி ரீதியாகத்தான் பிரச்சினை. அவர் பதவிக்கு ஆசைப்படுபவர், நான் அப்படியல்ல. பதவி பற்றி எப்போதுமே கவலைப்பட மாட்டேன்.

மீண்டும் கருணாநிதியை சந்தித்துப் பேசுவீர்களா?

சந்திக்க மாட்டேன். சந்திக்கும் எண்ணம் இப்போது இல்லை.

தலைமைக்கு விளக்கக் கடிதம் அனுப்புவீர்களா?

விளக்கக் கடிதம் ஏன் கொடுக்க வேண்டும்? நான் என்ன தவறு செய்தேன்?

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் மீண்டும் போட்டியிடுவீர்களா?

விரைவில் மதுரையில் நடக்கவுள்ள என் பிறந்தநாள் விழாவில் ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசுவேன். அவர்களின் கருத்துப்படி அடுத்தகட்ட முடிவை எடுப்பேன். என் ஆதரவாளர்களை எப்போதும் கைவிட மாட்டேன்.

உங்கள் மீது எடுத்த நட வடிக்கையால் திமுக குடும்ப அரசியல் நடத்துகிறது என்ற பழி துடைக்கப்பட்டுள்ளது என கி.வீரமணி கூறியிருக்கிறாரே?

அவர் ஒரு அரசியல் வியாபாரி. எங்கே கிடைக்கிறதோ அங்கே மாறி, மாறி பேசுவார்.

இவ்வாறு அழகிரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x