Published : 20 Jun 2016 08:59 AM
Last Updated : 20 Jun 2016 08:59 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு: சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம் - பொதுப் பிரிவினருக்கு நாளை தொடங்குகிறது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான முதல் கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணாசாலையில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,650 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 397 இடங்கள் (15 சதவீதம்) போக மீதமுள்ள 2,253 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. தமிழக அரசு ஏற்று நடத்தும் கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் மற்றும் இஎஸ்ஐ தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 20 இடங்கள் போக, மீதமுள்ள 65 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் மற்றும் இஎஸ்ஐ பணியாளர்களின் குழந்தைகளுக்கு 20 இடங்கள் போக, மீதமுள்ள 65 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் போக, மீதமுள்ள 85 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இவை தவிர 6 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 760 எம்பிபிஎஸ் இடங்களில் 470 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன. 17 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,610 பிடிஎஸ் இடங்களில் 970 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன.

அரசு மற்றும் தனியார் கல்லூரி களில் அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ள 2,853 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 1,055 பிடிஎஸ் இடங்களுக்கு 2016-17-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் 26 ஆயிரத்து 17 பேர் விண்ணப்பித்தனர். இதில் மூன்றாம் பாலினத்தவர் ஒருவரின் விண்ணப்பம் உட்பட 25 ஆயிரத்து 379 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கடந்த 14-ம் தேதி ரேண்டம் எண்ணும்,17-ம் தேதி தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டன. தரவரிசைப் பட்டியலில் ஒரு மாணவி, 2 மாணவர்கள் 200-க்கு 200 கட்-ஆப் எடுத்து முதலிடத்தை பிடித்தனர்.

சிறப்புப் பிரிவு

இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணாசாலையில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஜூன் 20-ம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. முதல் நாளில் சிறப்புப் பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 3 சதவீதம் இடங்களுக்கு 92 பேருக் கும், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் பிரிவில் 6 இடங் களுக்கு 60 பேருக்கும், விளை யாட்டு வீரர் பிரிவில் 3 இடங் களுக்கு 7 பேருக்கும் கலந்தாய்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 21-ம் தேதி (நாளை) தொடங்கி வரும் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 18-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ம் தேதி மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்குகிறது.

பிளஸ் 2 தேர்வில் முதலிடம், தரவரிசையில் 10-ம் இடம்

பிளஸ் 2 தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வி.ஆர்த்தி 1,200-க்கு 1,195 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். தமிழ் 199, ஆங்கிலம் 197, கணிதம் 200, இயற்பியல் 199, வேதியியல் 200, உயிரியல் 200 மதிப்பெண் எடுத்திருந்தார். எம்பிபிஎஸ் படிப்பதற்கு இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்கள் முக்கியமானவையாகும். இம் மாணவிக்கு இயற்பியல் பாடத்தில் ஒரு மதிப்பெண் குறைந்ததால் கட் - ஆப் 199.75 மதிப்பெண்கள் எடுத்து தரவரிசைப் பட்டியலில் 10-வது இடத்துக்கு சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x