

பெருங்களத்தூரில் ஆட்டோவில் ஒரு பயணி தவறவிட்ட 40 சவரன் நகைகள், ரூ.2 லட்சம் பணம் ஆகியவற்றை ஆட்டோ டிரைவர் பத்திரமாக ஒப்படைத்தார். அவரது நேர்மையை பாராட்டி சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வெகுமதி வழங்கினார்.
சென்னை பீர்க்கங்கரணையை சேர்ந்தவர் நிலோபர். இவர் திருச்சி சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு பஸ்ஸில் திரும்பினார். பெருங்களத்தூரில் பஸ்ஸில் இருந்து இறங்கிய நிலோபர், அங்கிருந்து பீர்க்கங்கரணைக்கு ஆட்டோவில் சென்றார். இந்த பயணத்தின்போது நிலோபர், ஆட்டோவில் ஒரு பையை தவற விட்டார். அதில் 40 சவரன் நகைகள், ரூ.2 லட்சம் பணம் இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் பீர்க்கங்கரணை போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார்.
போலீஸார் அவரிடம் விசாரணை நடத்திக்கொண்டிருந்தபோது, ஒரு ஆட்டோ டிரைவர் பீர்க்கங்கரணை போலீஸ் நிலையத்துக்கு வந்தார். தனது ஆட்டோவில் பயணம் செய்த ஒரு பெண் பையை தவறவிட்டதாக கூறி ஒரு பையை ஒப்படைத்தார். அந்த பையில் நிலோபர் தவறவிட்ட 40 சவரன் நகை, ரூ.2 லட்சம் பணம் இருந்தது. இதைத் தொடர்ந்து நகை மற்றும் பணத்தை போலீஸார் நிலோபரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அந்த ஆட்டோ டிரைவரின் பெயர் கண்ணன் (41) என்பதும், பெருங்களத்தூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ஆட்டோ டிரைவர் கண்ணனை நேற்று போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.