Last Updated : 21 Dec, 2013 09:07 PM

 

Published : 21 Dec 2013 09:07 PM
Last Updated : 21 Dec 2013 09:07 PM

வந்தாச்சு ஜல்லிக்கட்டு சீசன்: களைகட்டும் தென்மாவட்ட கிராமங்கள்

தை மாதம் நெருங்குவதால் தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காளைகள் மற்றும் இளைஞர்களின் வீரத்தைப் பரிசோதிக்கும் வகையில் நடத்தப்படும் இப்போட்டிகளுக்கு கிராம மக்களிடம் எப்போதும் வரவேற்பு உண்டு.

குறிப்பாக மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து அடுத்தடுத்து இப்போட்டிகள் நடத்தப்படும்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இந் நிலையில், காளைகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி 2008-ம் ஆண்டு விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், ஜல்லிக்கட்டு நடத்த இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தென்மாவட்டங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தீவிரமானது. இதையடுத்து தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குபடுத்தும் சட்டத்தை 2009-ம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்தது. அதன்பின் உச்ச நீதிமன்ற நிபந்தனைகள் மற்றும் தமிழக அரசின் ஒழுங்குபடுத்தும் சட்ட விதிகளின்கீழ் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது.

நெருங்குகிறது பொங்கல்

இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் தை 1-ம் தேதி தொடங்குகிறது. எனவே தங்களது கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் கிராம மக்கள் முழுவீச்சில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். ஜல்லிக்கட்டு நடத்த ஒரு மாதத்திற்கு முன்பே ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்பதால் தற்போதே அதற்கான விண்ணப்பங்களை கிராம மக்கள் அளித்து வருகின்றனர். அதேபோல் அரசிதழில் இல்லாத கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்த தடை உள்ளதால், உயர் நீதிமன்றங்களில் மனு செய்து அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

அலங்காநல்லூரில் ஏற்பாடு தீவிரம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றது. வெளிநாட்டினர் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிடும் இந்த ஜல்லிக்கட்டில், காளைகளை களமிறக்குவது, அவற்றின் உரிமையாளர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இச்சிறப்பு வாய்ந்த இந்த ஜல்லிக்கட்டு ஜனவரி 16-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், கிராம விழாக் குழுவினரும் செய்து வருகின்றனர். காளைகள் மற்றும் காளையர்களுக்கு அளிப்பதற்காக நன்கொடையாளர்களிடம் இருந்து பரிசுப் பொருள்களைச் சேகரிக்கும் பணியும் தொடங்கியுள்ளது.

எப்போது, எங்கு ஜல்லிக்கட்டு

சில ஆண்டுகளுக்கு முன் தென்மாவட்ட கிராமங்கள் தோறும் நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு கடும் கட்டுப்பாடு மற்றும் டெபாசிட் காரணமாக 2009-க்குப் பிறகு மிகவும் குறைந்து விட்டது.

தற்போதைய நிலவரப்படி ஜனவரி 14-ம் தேதி மதுரை மாவட்டம் அவனியாபுரத்திலும், 15-ம் தேதி மதுரை மாவட்டம் பாலமேடு, திருச்சி மாவட்டம் சூரியூர் ஆகிய இடங்களிலும், 16-ம் தேதி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், திருச்சி மாவட்டம் பாலக்குறிச்சி ஆவாரங்காடு, திண்டுக்கல் மாவட்டம் நத்தமாடிப்பட்டி ஆகிய கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

தயாராகும் தென் மாவட்டங்கள்

இதுதவிர மதுரை மாவட்டத்தில் சக்குடி, தேனி மாவட்டத்தில் அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநல்லூர், ஆலத்தூர், திண்டுக்கல் மாவட்டத்தில் பிள்ளமநாயக்கன்பட்டி, தவசிமடை, கொசுவப்பட்டி, சொரிப்பாறைப்பட்டி, வெள்ளேடு, மறவப்பட்டி, வீரசின்னம்பட்டி, புகையிலைப்பட்டி, திருச்சி மாவட்டம் கருங்குளம் ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து விழாக் கமிட்டியினர் ஆலோசித்து வருகின்றனர்.

அதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் சிராவயல், கண்டிப்பட்டி, என்.புதூர், நெடுமரம், கண்டரமாணிக்கம், மலைக்கோயில், அரளிப்பாறை, பட்டமங்கலம் ஆகிய இடங்களில் மஞ்சு விரட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காளைகள், காளையர்களுக்குப் பயிற்சி

சில மாதங்களாக ஓய்வில் இருந்த ஜல்லிக்கட்டு காளைகளை மீண்டும் தயார்படுத்தும் பணியில் அவற்றின் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். காளைகளுக்கு உடல் இளைக்க தினமும் சுமார் 4 கி.மீ. தூரம் நடைபயணம், மூச்சுத் திறனை அதிகரிக்க ஆறு, குளம், வாய்க்கால் போன்றவற்றில் 2 மணி நேரம் நீச்சல், தன்னை கட்டித் தழுவுபவரை தூக்கி எறிய பாய்ச்சல் பயிற்சி உள்ளிட்டவற்றை அளித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு மைதானங்களில் காளைகளை அடக்கும்போது காயம் ஏற்படாமல் இருக்க காளையர்களும் சிறப்புப் பயிற்சி பெறத் தொடங்கி விட்டனர். இதற்காக மார்கழி மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெரும்பாலான கிராமங்களில் ஜல்லிக்கட்டு பயிற்சி நடத்தப்படுவது வழக்கம்.

டெபாசிட்டுக்கு பதில் இன்சூரன்ஸ்?

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் குறித்து தமிழர் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க மாநிலத் தலைவர் அம்பலத்தரசு கூறியதாவது:

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரியமான வீர விளையாட்டு. இதைப் பாதுகாக்க வேண்டிய முயற்சி ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு. தற்போது உச்ச நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் கட்டுப்பாடுகளால் ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது.

இதற்கு ரூ.2 லட்சம் அல்லது ரூ.5 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை முக்கியமானது. இவ்வளவு தொகையை செலுத்த கிராம மக்களால் இயலாது. எனவே அதற்குப் பதிலாக ரூ.15 லட்சம் வரை இன்சூரன்ஸை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

இது குறித்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம். இதில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்பட்சத்தில் தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு கிராமங்கள் தோறும் உயிர்பெறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x