

தமிழக கிழக்கு கடற்பகுதியில் அமலில் இருக்கும் 61 நாள் மீன்பிடி தடைகாலம் இன்னும் 4 நாட்களில் நிறைவடைகிறது. கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல விசைப்படகுகள் மற்றும் உபகர ணங்களுடன் மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
தமிழக கடற்பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தின்போது, விசைப்படகுகளில் மீன்பிடிக்க, ஆண்டுதோறும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை 45 நாட்களாக இருந்த இந்த தடைகாலம், இந்த ஆண்டு 61 நாட்களாக அதிகரிக்கப்பட்டது.
மீனவர்கள் முடங்கினர்
கிழக்கு கடற்பகுதியில் ஏப்ரல் 15-ம் தேதி மீன்பிடி தடைகாலம் தொடங்கியது. அதன்பின், தூத்துக் குடி மாவட்டத்தில், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 270 விசைப் படகுகள், வேம்பாரில் 75 மற்றும் தருவை குளத்தில் 120 விசைப் படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், தூத்துக் குடியில் மட்டும் 2 ஆயிரத்துக் கும் மேற்பட்ட மீன்பிடி தொழி லாளர்களும், ஐஸ் கட்டிகள் உடைத் தல், மடிகளை ஏற்றுதல், மடிகளை பழுது நீக்குதல், மீன் வியாபாரத்தில் ஈடுபடுவோர் என்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிகள் ஏதுமின்றி முடங்கியிருந்தனர்.
இந்த தடைகாலத்தில், விசைப் படகுகளில் உள்ள பழுதுகளை நீக்குதல், மடிகள், வலைகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. பழைய மடிகளை சீரமைத்தல், புதிய மடிகளை உருவாக்குதல் என்று கடந்த 2 மாதங்களாக பணிகள் நடைபெற்றன.
விசைப் படகு மீன்பிடிப்பு இல்லாததால் மீன்சந்தைகளுக்கு மீன்வரத்து வெகுவாக குறைந் திருந்தது. நாட்டுப் படகுகளில் பிடிக்கப்பட்ட மீன்களே விற்ப னைக்கு வந்தன. இதனால், மீன் களின் விலை பெருமளவு உயர்ந் துள்ளது. இந்நிலையில், இன்னும் 4 நாட்களில் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் நிறைவடைகிறது.
தடைகாலத்துக்குப் பிறகு மீன் பிடிக்க ஏதுவாக விசைப் படகு களையும், மடிகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களையும் தயார் செய்யும் இறுதிகட்டப் பணிகளில் மீனவர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். வரும் 15-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு விசைப் படகு மீனவர்கள் மீண்டும் கடலுக்குள் செல்லத் தொடங்குவர். 61 நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்க செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்று மீனவர்களி டையே எதிர்பார்ப்பு உள்ளது.
தூத்துக்குடி அமலோற்ப மாதா விசைப்படகு தொழிலாளர்கள் சங்க தலைவர் எம்.தர்ம பிச்சை கூறியதாவது: கடந்த 61 நாட்களிலும் மீன்பிடிப்பு இல்லாததால் விசைப்படகு மீனவர்கள் பலரும் கேரளத்துக்கு மீன் பிடிக்கவும், வேறு பணிகளுக்கும் சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த தடைகாலத்தில் மீனவர் களுக்கு நிவாரண உதவியாக நபர் ஒருவருக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
அத்துடன் மீனவர் கூட்டுறவு சங்கங்களில் மீனவர்களின் சேமிப்பு தொகையில் இருந்து ரூ.2,700 வழங்கப்பட்டிருந்தது. 2 மாத காலத்துக்கு இந்த தொகை மீனவர்களின் குடும்ப செலவுக்கு போதாது என்பதால் மற்ற வேலை களுக்கு அவர்கள் சென்றிருந் தார்கள். தற்போது தடைகாலம் முடிவுக்கு வருவதால் அதிக மீன் கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மீனவர்களிடையே உள்ளது.
மேலும், தற்போது மேற்கு கடற்கரை பகுதியிலும் மீன்பிடி தடைகாலம் அமலில் இருப்பதால் கேரள வியாபாரிகள் பலரும் துறைமுகத்துக்கு வந்து மீன்களை வாங்குவார்கள். இதனால் மீன்களுக்கு அதிக விலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.