இரட்டை இலை சின்னம் விவகாரம்: 8 வாரம் அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பில் மனு

இரட்டை இலை சின்னம் விவகாரம்:  8 வாரம் அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பில் மனு
Updated on
2 min read

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கு 8 வார காலம் அவகாசம் வழங்க வேண்டுமென்று தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, சசிகலா, ஓபிஎஸ் தரப்பினரிடம் தேர்தல் ஆணையம் கடிதம் மூலமும் நேரிலும் விளக்கம் பெற்றது.

இதற்கிடையே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை யார் பெறுவது என்ற போட்டி ஏற்பட்டது. கடந்த மார்ச் 22-ம் தேதி, தேர்தல் ஆணையம் இரு தரப்பையும் அழைத்துப் பேசியது. இறுதியாக இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்தது.

அதிமுக கட்சிப் பெயர், கொடியை பயன்படுத்தவும் இரு தரப்புக்கும் தடை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வெவ்வேறு கட்சிப் பெயர், சின்னங்களில் போட்டியிடும்படி இரு பிரிவினரையும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்தபின், பிப்ரவரி 17-ம் தேதி மீண்டும் இரு தரப்பும் ஆஜராக வேண்டும் என்றும், அதன்பிறகே கட்சி, சின்னம் தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனவும் அறிவித்தது.

தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, சசிகலா அணி அதிமுக (அம்மா) என்ற பெயரில் தொப்பி சின்னத்திலும் ஓபிஎஸ் அணி அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) என்ற பெயரில் இரட்டை விளக்குகள் கொண்ட மின்கம்பம் சின்னத்திலும் தேர்தலை சந்திக்கத் தயாராகின. ஆனால், பணப் பட்டுவாடா புகார் காரணமாக ஆர்.கே.நகரில் நடக்கவிருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான முயற்சியில் அதிமுகவின் இரு அணிகளும் தீவிரமாகி உள்ளன.

சசிகலா அணியைப் பொறுத்தவரை, ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்திருந்த நிர்வாகிகள் மூலம் கிளைச் செயலாளர், வட்டச் செயலாளர்களை தொடர்பு கொண்டு பேசினர். அந்தந்த பகுதிகளில் உள்ள தொண்டர்களை சந்தித்து அவர்களிடம் இருந்து ஆதரவு கடிதம் பெற வலியுறுத்தினர். அவ்வாறு பெறப்பட்ட கடிதங்கள், தேர்தல் ஆணையத்தில் ஆஜராகும்போது சமர்ப்பிக்கப்பட உள்ளது.

ஓபிஎஸ் அணியைப் பொறுத்தவரை ஏற்கெனவே 40 லட்சம் பேருக்குமேல் தங்களுக்கு ஆத ரவு இருப்பதாக தேர்தல் ஆணை யத்திடம் கடிதம் அளித்துள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் அந்த அணியும் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

ஏப்.17-ம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் குறித்த ஆவணங்களை தருமாறு இரு தரப்புக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்கு 8 வார காலம் அவகாசம் வழங்க வேண்டுமென்று தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in