

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவற்றுக்கு தொகுதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தங்களது சிட்டிங் தொகுதியான வேலூரை மீண்டும் கேட்கிறது. செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சுவார்த்தையில், முஸ்லிம் லீக் நிர்வாகிகளிடம் துரைமுருகன் தனது மகனுக்காக வேலூரை விட்டுத் தருமாறு நேரடியாகவே கேட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கு அவர்கள் வேலூருக்குப் பதிலாக மத்திய சென்னையை கேட்டுள்ளனர். ஆனால் தயாநிதிமாறன் வேட்பாளராக விருப்பம் தெரிவித்துள்ளதால் இறுதியாக, ராமநாதபுரத்தை முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்க திமுக முன்வந்ததாம். ஆனால், அந்தத் தொகுதியை முஸ்லிம் லீக் விரும்பவில்லையாம். இறுதியாக திருநெல்வேலி அல்லது திருச்சியை ஒதுக்க பேச்சு நடைபெற்று வருகிறது.
இதனிடையே சிதம்பரம், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கேட்டுள்ளனர். கடந்த முறை விழுப்புரத்தில் தோற்றதை திமுக தரப்பில் சுட்டிக் காட்டியுள்ளனர். எனவே, இம்முறை வெற்றி பெறக்கூடிய சிதம்பரம் தொகுதியை மட்டும்
திருமாவளவன் போட்டியிடுவதற்காக ஒதுக்குவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். எனவே, புதன்கிழமை இவ்விரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று தொகுதிப் பங்கீடு இறுதிசெய்யப்படும் எனத் தெரிகிறது.