Published : 24 Nov 2015 08:23 AM
Last Updated : 24 Nov 2015 08:23 AM

சென்னையில் கொட்டித் தீர்த்த மழை: குடியிருப்புகளில் தேங்கிய நீர்- கடும் அவதிக்குள்ளான மக்கள்

சென்னையில் நேற்று (திங்கள்கிழமை) மாலை முதல் இரவு வரை 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் நகரின் பல பகுதிகள் குறிப்பாக வேளச்சேரி, அடையாறு கரையோரம் போன்ற பகுதிகளில் மீண்டும் மழை நீர் புகுந்தது.

நேற்று இரவு முதல் கிண்டி, கத்திபாரா, வடபழனி, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை அலுவலகம் முடிந்து வீட்டுக்கு புறப்பட்டவர்கள் பலரும் பின்னிரவே வீடு சென்று சேர்ந்தனர்.

இன்று காலையும் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து சீரடையவில்லை. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அலுவலகங்கள் செல்பவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

சென்னையில் மீண்டும் மழை பெய்ததால் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் மீண்டும் மழைநீர் தேங்கியது.

சென்னையில் கடந்த இருவாரங்களாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீர் வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் போது மீண்டும் மழை பெய்தது, மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்:

குறிப்பாக மாலை 6 மணிக்கு பிறகு கனமழை பெய்ததால், ஜிஎஸ்டி சாலை, அண்ணாசாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, வேளச்சேரி நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கியமான சாலைகளில் மழைநீர் வெள்ளமாக ஓடின. இதனால், பணி முடித்து திரும்பும் மக்கள் அவதிப்பட்டனர். ஏற்கெனவே தேசமடைந்துள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்ல சிரமமடைந்தனர்.

படம்: ஆர்.ரகு

பேருந்து நிறுத்தங்களில் நிழற்கூடைகள் இல்லாததால், பயணிகள் மழையில் நனைந்து பரிதவித்தனர். பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், மாநகர பேருந்துகள் இயக்குவதில் சிரமமாக இருந்தது.

படம்: ஆர்.ரகு.

நேற்று மாலை சென்னை அண்ணாசாலையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் கிண்டி மேம்பாலம் செல்ல மூன்று மணிநேரம் ஆனது. கிண்டி ரயில்வே நிலையம் அருகில் வெள்ள நீர் சூழ்ந்ததும் இதற்கான ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

விடுமுறை?

இதற்கிடையில் டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ் போன்ற மென்பொருள் நிறுவனங்கள் சில ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுமக்கள் மறியல்

வேளச்சேரி காந்திநகர் பகுதியில் பெய்த மழையால் மீண்டும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் அவதிக்குள்ளான பொதுமக்கள், வேளச்சேரி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் சமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனர்.

இதேபோல் புளியந்தோப்பு ராம சாமி தெரு, மன்னார்சாமி தெரு உள்ளிட்ட பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியுள்ளது. அதை அகற்றக்கோரி புளியந் தோப்பு நெடுஞ்சாலையில் நேற்று மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கழிவுநீர் கலப்பு

வட சென்னையில் திருமுல்லை வாயல், அம்பத்தூர், விநாயகபுரம், கொளத்தூர், பெரம்பூர், வியாசர் பாடி உள்ளிட்ட பகுதிகளில் தாழ் வான பகுதிகளில் உள்ள தெருக் களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்துள்ளது. இதனால் துர்நாற்ற மும், கொசுத் தொல்லையும் அதி கரித்துள்ளது. பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பல இடங்களில் வாக னங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உற்பத்தி பாதிப்பு

அம்பத்தூர் தொழிற்பேட்டை யில் 10 நாட்களுக்கு மேலாகியும் மழை நீர் வடியாததால் பெரும் பாலான தொழிற்சாலைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், மின்சாரமும் அப் பகுதியில் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

பஸ் நிலையத்தில் மழைநீர்

திருவான்மியூர் பஸ் நிலையம், எல்.பி.சாலையை ஒட்டிய பகுதிகள், கலாக்ஷேத்ரா காலனி ஆகிய இடங்களில் மழைநீர் படிப்படியாக வடிந்த நிலையில், மீண்டும் மழைநீர் தேங்கியிருப்பது பொதுமக்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

போக்குவரத்து நெரிசல்

தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையும், ரங்கராஜபுரம் புதிய பாலமும் சந்திக்கும் இடத்தில் கொஞ்சமும் குறையாத மழை நீர் போக்குவரத்தை முடக்கியது. வாகனங்கள் ஊர்ந்தே சென்றதால் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது.

புறநகரில் மழைநீர்

கிழக்கு தாம்பரம் அடுத்த மகாலட்சுமி நகரில் இருந்து சிட்லபாக்கம் செல்லும் சாலை அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் மீண்டும் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர்.

மேற்கு தாம்பரத்தில் அன்னை அஞ்சுகம் நகர், அம்பேத்கர் புது நகர் மற்றும் முடிச்சூர், பெருங் களத்தூர் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்றும் பணியில் தாம்பரம் நகராட்சி பணி யாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருநின்றவூரில் சிஎம்டிஏ அனுமதி பெற்று முறையாக கட்டப்பட்ட வீடுகள் நிறைந்த அன்னை இந்திரா நகர் பகுதி முழுவதும் இப்போதும் 3 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது தொடர்பாக பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

350 பம்பு செட்டுகள்

மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மாநகராட்சி சார்பில் 305 டீசல் பம்பு செட்டுகள், 47 சூப்பர் சக்கர் இயந்திரங்களைக் கொண்டு தொடர்ந்து அகற்றப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x