

முதல்வர் ஜெயலலிதா, இன்று டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்த மனுவை அளிக்கிறார்.
தமிழக முதல்வராக 6-வது முறையாக பதவி யேற்ற பிறகு முதல்முறையாக ஜெயலலிதா இன்று டெல்லி செல்கிறார். காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி செல்லும் ஜெயலலிதா, தமிழ்நாடு இல்லத்தில் ஒரு மணி நேரம் ஓய்வெடுக்கிறார். அதன்பின், மத்திய அமைச்சர்கள் சிலர் ஜெயலலிதாவை தமிழ்நாடு இல்லத்தில் சந்திக்கின்றனர்.
மாலை 4.30 மணிக்கு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்படும் ஜெயலலிதா, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்துக்கு செல்கிறார். தமிழக திட்டங்கள் குறித்து பிரதமருடன் சுமார் 50 நிமிடங்கள் பேசுகிறார். சந்திப்பு முடிந்ததும் டெல்லியில் இருந்து 7 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.30 மணிக்கு சென்னை திரும்புகிறார்.
பிரதமரை சந்திக்கும்போது, 32 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை அவரிடம் ஜெயலலிதா அளிக்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, மேகேதாட்டு அணை, முல்லை பெரியாறு அணை மற்றும் நதிநீர் இணைப்பு, இலங்கைத் தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பது, கச்சத்தீவு பிரச்சினைக்கு தீர்வு காண்பது, மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்துவதில் விலக்கு அளிக்க கோருவது உள்ளிட்ட அம்சங்கள் கோரிக்கை மனுவில் இடம் பெறு கின்றன.
இது தவிர, நிதி ஆயோக்கில் தமிழகத்தின் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை திட்டங்களுக்கான ஒப்புதல், ஆழ்கடல் மீன் பிடிப்பு தொடர்பான திட்டத்துக்கு ஒப்புதல் போன்றவை தொடர்பாகவும் முதல்வர் விவா திக்க வாய்ப்புள்ளது.
முதல்வருடன் தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ், நிதித்துறை செயலாளர் சண்முகம் ஆகியோரும் டெல்லி செல்கின்றனர்.