சூளைமேட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.45 கோடி மதிப்புள்ள பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்கப்படுகிறது

சூளைமேட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.45 கோடி மதிப்புள்ள பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்கப்படுகிறது
Updated on
1 min read

சூளைமேட்டில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த 44 கோடியே 79 லட்சம் மதிப்புள்ள பழைய ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பணத்தின் உரிமையாளர் குறித்து வருமான வரி புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

சூளைமேடு, ஜக்காரியாக காலனி, 2-வது தெருவில் தண்டபாணி (50) என்பவர் வசித்து வருகிறார். வீட்டின் முன் பகுதியில் ‘ராமலிங்கம் ஸ்டோர்ஸ்’ என்ற பெயரில் சிறிய வகை ஜவுளிக் கடையை நடத்தி வருகிறார். இங்கு செல்லாத ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கோடம்பாக்கம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து தியாகராய நகர் காவல் துணை ஆணையர் சரவணன், இன்ஸ்பெக்டர் கிரி, உதவி ஆய்வாளர் அம்பேத்கர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஜெயக்குமார், புருஷோத்தமன் தலைமையிலான போலீஸார் கடந்த 17-ம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு தண்டபாணி வீடு மற்றும் கடைக்குள் புகுந்து அங்கு கட்டுக் கட்டாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 44 கோடியே 79 லட்சம் மதிப்புள்ள நோட்டுகளை பறி முதல் செய்தனர்.

அந்த பணம் முழுவதும் கோடம் பாக்கம் காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 102-ன் கீழ் (சட்ட விரோதமாக பொருட்களை பதுக்கி வைத்தல்) தண்டபாணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தண்டபாணியிடம் நடத்தப் பட்ட விசாரணையில் தேனாம்பேட் டையைச் சேர்ந்த நகை வியாபாரம் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வரும் ஒருவருடைய பணம் தான் அது என தெரியவந்துள்ளது. அவரிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, வருமான வரி புலனாய்வு அதிகாரிகளும் இது தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

தற்போது கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் வைக்கப்பட் டுள்ள பணத்தை பாதுகாப்பு கருதி ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க போலீஸாரும், வருமான வரி புலனாய்வு அதிகாரிகளும் முடிவு செய்துள்ளனர். நீதிமன்ற அனுமதி யோடு பணத்தை அங்கு எடுத்துச் செல்லவுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in