

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், இன்று பதவியேற்கிறார். ‘தேசியத் தலைமையின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பணியாற்றுவேன்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த பி.எஸ்.ஞானதேசிகன், கடந்த வியாழக்கிழமை பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்தபோது, தமிழக காங்கிரஸ் தலைவராக பணியாற்றியவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இப்போது, கட்சித் தலைமைக்கு எதிராக வாசன் திரும்பியுள்ள நிலையில், மீண்டும் த.மா.கா. உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 2-வது முறையாக தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று காலை 10 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் பதவியேற்கிறார். மேலிட அறிவிப்பு வெளியானதும் நேற்று பகல் 12 மணிக்கு கட்சித் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த இளங்கோவனை அவரது ஆதரவாளர்கள் மேள, தாளம் முழங்க உற்சாகமாக வரவேற்றனர். பட்டாசு வெடித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.
வரவேற்புக்கு பிறகு நிருபர்களுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டி:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, தமிழக காங்கிரஸ் தலைவராக என்னை நியமித்துள்ளது. அதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அகில இந்திய தலைமையின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பணியாற்றுவேன்.
என்னை தலைவராக நியமித்து அறிவிப்பு வெளியானபோது, ஜி.கே.வாசனுடன் ஆலோசனையில் இருந்தேன். அறிவிப்பு வெளியானதும் முதலில் ஜி.கே.வாசனிடம் வாழ்த்து பெற்றேன். காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குமரி அனந்தன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், கிருஷ்ணசாமி, பிரபு, தங்கபாலு ஆகியோரையும் சந்தித்து வாழ்த்து பெறுவேன். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் டெல்லி சென்றுள்ளார். அவரிடமும் வாழ்த்து பெறுவேன். நான் முறையாகப் பதவியேற்ற பிறகு, மற்ற விஷயங்கள் குறித்து தெரிவிக்கிறேன்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார். பின்னர் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திராவிட இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.சம்பத்தின் மகனான இளங்கோவன், ஈரோட்டில் 1948-ம் ஆண்டு பிறந்தார். பி.ஏ. (பொருளாதாரம்) பட்டம் பெற்றவர். மாவட்ட காங்கிரஸில் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார். 1996 முதல் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராக இருந்து வருகிறார். 2000 முதல் 2002-ம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி வகித்துள்ளார். சட்டப்பேரவை உறுப்பினராகவும், மத்திய இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.
இவரது தாய் ஈ.வி.கே.சுலோச்சனா சம்பத், அதிமுக அமைப்புச் செயலாளராக இருக்கிறார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.