

யானைகளுக்கு இடையில் நடைபெறும் மோதலில் எறும்புகள் நசுங்கி இறந்ததைப் போல, அதிகாரப் போட்டியில் விவசாயிகள் துயரங்கள் மறைக்கப்படுகின்றன என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
யானைகளுக்கு இடையில் நடைபெறும் மோதலில் எறும்புகள் நசுங்கி இறந்ததைப் போல, தமிழகத்தில் இரு குழுக்களிடையே நடைபெற்று வரும் அதிகாரப் போட்டியில், உழவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் கண்டுகொள்ளப்படாமல் மறைக்கப்படுகின்றன. தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இழப்பீடும் இதுவரை வழங்கப்படாததால் தமிழகம் முழுவதும் உள்ள உழவர்களின் துன்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடாததாலும் தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவுவது அனைவரும் அறிந்தது தான். குறுவை சாகுபடி பொய்த்துப் போன நிலையில், கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்களும் கருகியதால் அதிர்ச்சியடைந்த 270-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான உழவர்கள் கடன் சுமையில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களும் தற்கொலை என்னும் தவறான முடிவை தேடிவிடாமல் தடுக்க, அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கான நிவாரணத் திட்டத்தை கடந்த மாதம் 10-ஆம் தேதி பன்னீர்செல்வம் அறிவித்தார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களில் நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.5465, நீண்ட கால பயிர்களுக்கு ரூ.7287, மானாவாரி பயிர்களுக்கு ரூ.3000 என்ற அளவில் இழப்பீடு வழங்கப்படும், இந்த ஆண்டில் உழவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.3028 கோடி பயிர்க்கடன் மட்டும் குறுகியக் கால கடனில் இருந்து மத்திய காலக் கடனாக மாற்றப்படும், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப் படும் நாட்களின் எண்ணிக்கை 150-ஆக உயர்த்தப்படும் என்று முதலமைச்சரின் அறிவிப்பில் குறிப்பிடப் பட்டிருந்தது. இந்த நிவாரண உதவிகள் அனைத்தும் மத்திய அரசிடமிருந்து நிதி கிடைத்ததும் வழங்கப் படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருந்தார். முதலமைச்சர் அறிவித்த நிவாரண உதவி உழவர்களின் துயரங்களைத் தீர்க்க போதுமானது இல்லை என்றாலும், அந்த உதவி உடனடியாக கிடைத்தால் கடன் தொல்லை மற்றும் இதர பாதிப்புகளில் இருந்து ஓரளவாவது மீளலாம் என உழவர்கள் எண்ணினர்.
ஆனால், நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டு 34 நாட்களாகியும் இன்று வரை அவை வழங்கப்பட வில்லை. வறட்சி நிதி வழங்கக் கோரி மத்திய அரசிடம் மனு கொடுத்து ஒரு மாதமாகியும், மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. தமிழக ஆட்சியாளர்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து நிவாரண உதவியை பெறுவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் உழவர்கள் வாங்கிய கடனும், அதற்கான வட்டியும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாத உழவர்கள் பலர் ஊரை விட்டு வெளியேறி தலைமறைவாக வாழும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150ஆக அதிகரிக்கப்பட்டிருக்கும் போதிலும், உள்ளாட்சித் தலைவர்கள் இல்லாததால் அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் காவிரிப் பாசன மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்கள் வேலை தேடி திருப்பூருக்கும், கேரளத்திற்கும் இடம் பெயர்கின்றனர். மொத்தத்தில் தமிழ்நாட்டு விவசாயிகளின் நிலைமை அகதிகளின் நிலையை விட மிகவும் மோசமடைந்து வருகிறது.
உழவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய ஆளுங்கட்சியின் தலைவர்கள் அதிகாரப் போட்டியை நடத்திக் கொண்டிருக்கின்றனர். தமிழக உழவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பு மத்திய அரசுக்கும் உள்ள நிலையில், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரோ இப்படி ஒரு பிரச்சினை இருப்பதாகக் கூட காட்டிக் கொள்ளவில்லை. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அதிகாரப்போட்டி இப்போதைக்கு முடிவுக்கு வருவதாக தோன்றாத நிலையில், தமிழகத்திலுள்ள அதிகாரிகள் மூலம் மத்திய அரசே நேரடியாக நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.
அதேநேரத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள உதவிகள் போதாது என்பதால், நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். உச்சவரம்பும், நிபந்தனையும் இல்லாமல் அனைத்து உழவர்களின் பயிர்க்கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும், நீண்டகால பணப்பயிர்களுக்கு சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு ரூ.1 லட்சம் வரையிலும், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன், அதிர்ச்சியிலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்த அனைத்து உழவர் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடும் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.