Published : 03 Aug 2016 11:46 AM
Last Updated : 03 Aug 2016 11:46 AM

பெசன்ட் நகர் தீ விபத்தில் 81 குடிசைகள் எரிந்து சாம்பல்: சிலிண்டர்களும் வெடித்து சிதறியதால் சேதம் அதிகரிப்பு

பெசன்ட் நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 81 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. வீடுகளில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப் பட்டவர்களுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று நிவாரணம் வழங்கினர்.

பெசன்ட் நகர் ஓடை குப்பம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இங்கு புஷ்பராஜ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேல்தளத்தில் ஓலை கொட்டகை அமைத்து அதை வாடகைக்கு விட்டுள்ளார். அதில், வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். அவர்கள் நேற்று முன்தினம் சமைப்பதற்காக தீ பற்ற வைத்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஓலை தீ பற்றிக் கொண்டது. சில நிமிடங்களிலேயே தீ அருகில் உள்ள குடிசைகளுக்கும் பரவியது. தொடர்ந்து காற்று வீசியதால் தீ மிக விரைவாகப் பரவியது.

அப்போது வீடுகளுக்குள் இருந்த சிலிண்டர்கள் பெரும் சப்தத்துடன் வெடித்து சிதறின. அதிலிருந்து வெளியேறிய எரிவாயுவால் தீயின் வேகம் இன்னும் அதிகரித் தது. வீடுகளில் இருந்த கட்டில், மெத்தை நாற்காலி, டிவி உள்ளிட்ட பொருட்கள், பத்திரங்கள், பள்ளி மாணவ, மாணவிகளின் புத்தகங்கள், ஆடை, ஆபரணங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீயில் கருகி நாசமாகின.

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தென் சென்னை தீயணைப்பு அதிகாரி விஜயகுமார் தலைமையில் கிண்டி, சைதாப்பேட்டை, சாஸ்திரிபவன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 8 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ முற்றிலும் அணைக்கப் பட்டது. இதற்குள் 81 வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்ததாக சாஸ்திரிபவன் போலீஸார் கணித்துள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

தீ விபத்தில் தங்களது உடமைகளை முற்றிலும் இழந்து செய்வதறியாமல் தவித்த மக்களை தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், உதயகுமார், சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கிலோ அரிசி, வேட்டி, சேலைகள், குடும்பத்துக்கு தலா ரு.5 ஆயிரம் வழங்கினர். பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பாக வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x