

வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை தேர்தல் ஆணையமே ஏற்க வேண்டும் என தமாகா கோரிக்கை விடுத்துள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியில் 26 இடங்களில் போட்டியிட்ட தமாகா அனைத்திலும் தோல்வி அடைந்தது. தேர்தல் தோல்வி குறித்து கடந்த வாரம் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களுடன் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து தமாகா செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. துணைத் தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், வேலூர் ஞானசேகரன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதனை தமாகா நிர்வாகிகளை கண்காணித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளில் நன்கொடை வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசே விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
சேவை வரியால் பொதுமக்கள் மிகப்பெரிய பொருளாதார சுமையை சந்தித்து வருகின்றனர். எனவே சேவை வரி விதிப்பை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதைய தேர்தல் முறையில் பணபலம் படைத்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை உள்ளது. தேர்தல் களத்தில் அனைவருக்கும் சம வாய்ப்பை உருவாக்குவதே ஜனநாயகமாகும். எனவே, தேர்தல் செலவுகளை தேர்தல் ஆணையமே ஏற்க வேண்டும். தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக நடத்த பல்வேறு சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் கொண்டு வர வேண்டும்.
தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். நதி நீர் இணைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, நெய்யாறு பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், ‘‘கட்சி தொடங்கிய ஒன்றரை ஆண்டுகளில் தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. தமாகா என்பது தேர்தல் வெற்றி தோல்விக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. தமிழக மக்களுக்கான தமாகாவின் பயணம் தொடரும்’’ என்றார்.