Published : 24 Oct 2013 06:42 PM
Last Updated : 24 Oct 2013 06:42 PM

காமன்வெல்த் மாநாடு: சட்டமன்ற தீர்மானம் மீது வைகோ அதிருப்தி

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாடு தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஈழத்தமிழர்களின் இலக்கை திசை மாற்றம் செய்யும் நோக்கில் உள்ளதாக, மதிமுக பொதுச் செயலர் வைகோ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “காமன்வெல்த் நாடுகளின் அரசுத் தலைமைகளின் கூட்டம், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதால், இந்திய அரசு காமன்வெல்த் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா எனும் இந்தியரைக் கொண்டு, மிகத் தீவிரமான வேலைகளில் ஈடுபட்டதால், கொடூரமான தமிழ் இனப்படுகொலை நடத்திய சிங்கள அரசு நிர்வகிக்கும் இலங்கை நாட்டில் அம்மாநாடு, வருகின்ற நவம்பர் 17,18 தேதிகளில் நடைபெற உள்ளது.

ஈழத் தமிழர் இனப்படுகொலையின் கூட்டுக்குற்றவாளியான, காங்கிரஸ் தலைமை தாங்கும் இந்திய அரசு, இனக்கொலை குறித்த நீதி விசாரணை வரவிடாமல் தடுப்பதற்காக, இந்த வஞ்சகமான சதிச்செயலில் ஈடுபட்டது. ஏனெனில், எந்த நாட்டில் காமன்வெல்த் மாநாடு நடக்கிறதோ, அந்தநாட்டின் அதிபரே, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அந்த அமைப்புக்குத் தலைவராக இருப்பார்.

எனவே, தமிழ் இனக்கொலை புரிந்த மாபாதகன் மகிந்த ராஜபக்சேவை, காமன்வெல்த் அமைப்புக்குத் தலைவராக்கி, தமிழ் இனக்கொலைக் கொடுமையை, விசாரணைக்கு வரவிடாமல் குழிதோண்டிப் புதைப்பதுதான், இந்திய இலங்கை அரசுகளின், கூட்டுச் சதி நோக்கம் ஆகும்.

எனவேதான், தொடக்கத்தில் இருந்தே, இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும்; அப்படி நீக்குவதனால், இலங்கையில் அம்மாநாடு நடைபெற வாய்ப்பு இன்றிப் போகும் என்று வலியுறுத்தி வருகிறேன்.

'இந்தியா பங்கு ஏற்கக் கூடாது' என்ற கருத்தை நான் தெரிவிக்காததன் காரணமே, சிங்கள அரசுக்கு காமன்வெல்த் அமைப்பின் தலைமை என்ற பொறுப்பை முடிசூட்டி விட்டு, தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டு, தமிழ்நாட்டு மக்களையும் ஏமாற்றுவதற்கு, இந்தியப் பிரதமர் மட்டும் அல்ல இந்தியாவின் பிரதிநிதி எவரும்கூட பங்கு ஏற்காமல் ஒரு கபட நாடகத்தை நடத்த முற்படுவார்கள் என்று கூறி இருந்தேன்.

இன்று (24.10.2013), தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் இதுகுறித்து ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, சட்டமன்றம் முழுமனதாக நிறைவேற்றி இருக்கிறது. முதலமைச்சர் உரையையும், தீர்மானத்தையும் மேலோட்டமாகக் கவனித்தால், ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க எடுக்கப்படும் நடவடிக்கை போன்ற தோற்றத்தைத் தருவதால், அதனை வரவேற்கத் தோன்றும்.

ஆனால், தீர்மான வரிகளை ஊடுருவிப் பார்த்தால், 27.3.2013 அன்று தமிழகச் சட்டப்பேரவையில், தமிழக முதலமைச்சர் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்துக்கு முரண்பாடாக, இன்றைய தீர்மானம் அமைந்து இருப்பது கவலை தருகிறது.

அன்றைய தீர்மானத்தில், 'இலங்கை இனப்போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து, சுதந்திரமான நியாயமான சர்வதேச புலன் விசாரணை நடத்திடவும், இந்த விசாரணையின் அடிப்படையில் போர்க்குற்றம் நிகழ்த்தியவர்கள், சர்வதேச நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்திடவும், ஈழத்தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, தனி ஈழம் குறித்து, இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழுகின்ற தமிழர்களிடமும், பொது வாக்கெடுப்பு நடத்திடவும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் தீர்மானத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று நிறைவேற்றப்பட்டது.

அத்தீர்மானத்தை வரவேற்றுப் பாராட்டியதோடு, அந்தத் தீர்மானத்துக்காக, தமிழக அரசுக்கு வரலாறு பொன் மகுடம் சூட்டும் என்று மிகவும் சிலாகித்து வாழ்த்தி இருந்தேன்.

ஆனால், இன்று நிறைவேற்றப்பட்டு இருக்கின்ற தீர்மானத்தில், 'இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகவும், சிங்களர்களுக்கு இணையாகவும் வாழ, இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும்வரை, காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து, இலங்கை நாட்டைத் தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று, இந்தியப் பேரரசை, தமிழ்நாடு சட்டப்பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என்று தீர்மானம் குறிப்பிடுகிறது.

எனவே, சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மார்ச் மாதம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு முரணாக இன்றைய தீர்மானம் இருக்கின்றது.

சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்கள் வாழ, இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் வரை, காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று குறிப்பிடுவது, கொலை செய்வதனிடமே பரிகாரத்தையும், நீதியையும் எதிர்பார்க்கின்ற செயல் ஆகும். ஏற்கனவே சிங்கள அரசு, எல்எல்ஆர்சி விசாரணை என்று கூறி,ஒரு போலி நாடகத்தை நடத்தி, உலகத்தை ஏமாற்றி வருகிறது.

ஒன்றுபட்ட இலங்கைக்குள், சிங்களவர்களோடு தமிழர்கள் சமமாக வாழ, இலங்கை அரசு வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைதான், இத்தீர்மானத்தில் அடங்கி இருக்கிறது. இது, புண்ணுக்குப் புனுகு பூசுகிற வேலை மட்டும் அல்ல, இனக்கொலைக் குற்றத்திற்கு, சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை என்ற கோரிக்கையை, நீர்த்துப் போக வைக்கின்ற செயல் ஆகும்.

காமன்வெல்த் அமைப்பில் இருந்து எந்த நாட்டையும் நிரந்தரமாக நீக்கி வைக்க விதிகள் இல்லை. தற்காலிகமாகத்தான் நீக்கி வைக்க முடியும். உகாண்டா அதிபர் இடி அமீன் நடத்திய படுகொலைகளுக்காக, உகாண்டா காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கி வைக்கப்பட்டது. பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டதால் ஒருமுறையும், ஜனநாயக உரிமைகள் அழிக்கப்பட்டதால், இரண்டாவது முறையும் காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கி வைக்கப்பட்டது.

ஜனநாயகம் அழிக்கப்பட்டதால், ஃபிஜித் தீவுகள் இப்போதும் நீக்கி வைக்கப்பட்டு இருக்கின்றது. நைஜீரியா நாட்டில் கென் சரோ விவா என்ற பழங்குடி மக்களின் போராளி தூக்கில் இடப்பட்டதால், மறுநாளே நைஜீரியா, காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது.

எனவே, இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள், ஆயுதம் ஏந்தாதவர்கள் என அனைவரையும் கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள அரசை, இனக்கொலைக் குற்றத்திற்காக, காமன்வெல்த் அமைப்பில் இருந்து தற்காலிகமாக நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தால், அது தமிழர்களுக்கான நீதிக்குக் குரல் கொடுக்கும் தீர்மானமாக, வெளிச்சத்திற்கு வழிகாட்டும் தீர்மானமாக அமைந்து இருக்கும்.

ஆனால், இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஈழத்தமிழர்களின் உரிமைப்போரின் நியாயத்தின் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்கின்ற விதத்திலும், மகத்தான தியாகங்கள் செய்து காட்டப்பட்ட இலக்கை, திசை மாற்றம் செய்யும் நோக்கிலும் அமைந்து இருப்பதால், இத்தீர்மானம் மனநிறைவைத் தரவில்லை; ஏமாற்றம் அளிக்கிறது என்பதை, ஈழத்தமிழ் உணர்வாளர்களுக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் தெரிவிக்க வேண்டியது கடமை என்ற உணர்வுடன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்தைப் பதிவு செய்கிறேன்” என்று வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x