

சென்னை தவிர மற்ற மாவட்டங் களில் உள்ள குடும்ப அட்டைதாரர் களுக்கு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கும் பணி தொடங்குகிறது.
தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. கடந்த 2005-ம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த குடும்ப அட்டைகள் 2009-ம் ஆண்டே காலாவதியாகிவிட்டன. ஆனால், அதன்பின் தொடர்ந்து உள்தாள் ஒட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடும்ப அட்டைக்குப் பதில் மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது.
மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு முன்னோடியாக, உணவுத்துறை முழுமையாக கணினி மயமாக்கப்பட்டது. தமிழகத் தில் உள்ள 34 ஆயிரம் நியாய விலைக் கடைகளுக்கும் விற்பனை முனைய இயந்திரம் (பாயின்ட் ஆப் சேல்) வழங்கப்பட்டது. அதில், குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கூறப்பட்டது. இப்பணிகள் தற்போது 95 சதவீதம் முடிந்த நிலையில், மின்னணு குடும்ப அட்டை அச்சடிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
சட்டப்பேரவையில் உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்தபடி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படுகின்றன. சென்னை பாடியில் உள்ள மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணியை தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக உணவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதாலும், ஆதார் இணைப்பு பணிகள் முழுமை யாக முடியாததாலும், 16 மண்டலங் களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏப்ரல் 1-ம் தேதி மின்னணு அட்டை வழங்கப்பட மாட்டாது. மற்ற மாவட்டங்களில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்கப்படும். தற்போது வரை 50 லட்சம் அட்டைகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள அட்டைகள் அச்சடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பாயின்ட் ஆப் சேல் இயந்திரத்தில் பதிவுகள் செய்யப்பட்டபோதே, குடும்ப தலைவர் அல்லது வீட்டில் உள்ள ஒருவரின் கைபேசி எண் பெறப்பட்டுள்ளது. மின்னணு குடும்ப அட்டை தயாராகிவிட்டால், சம்பந்தப்பட்ட எண்ணுக்கு குறுஞ் செய்தி அனுப்பப்படும். அதன்பின், பெற்றுக்கொள்ளலாம். மின்னணு அட்டை வழங்கும் பணிகளை அடுத்த 2 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். அதுவரை பழைய குடும்ப அட்டை மூலம் பொருட்களை வாங்கிக்கொள்ள லாம்.
மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய வேண்டும் எனில் அரசு இ-சேவை மையங்களை அணுக வேண்டும். அல்லது, வட்டார வழங்கல் அதிகாரியை தொடர்புகொள்ளலாம். குடும்ப உறுப்பினர்கள் அனைவரது ஆதார் விவரங்களும் இணைக்கப்படும் பட்சத்தில், யார் வேண்டுமானாலும் சென்று பொருட்களை வாங்கலாம்.
மின்னணு குடும்ப அட்டை வழங் கும் பணிக்காக கடை ஊழியர்கள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை விடுப்பு எடுக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்னணு குடும்ப அட்டை குறித்த குறுஞ்செய்தி வராதவர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். அட்டை தயாரிப்பு பணி முடிந்ததும் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.