

பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர் மாரியப்பனுக்கு மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள தமிழக வீரர் மாரியப்பனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டிலுள்ள ரியோ நகரில் நடந்து வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89மீ உயரம் தாண்டியதன் மூலம் இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் இந்த அரிய சாதனையை நிகழ்த்தியிருப்பதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் பெறவில்லையே என்று ஏங்கிய எண்ணற்ற விளையாட்டு ரசிகர்களின் மனதைக் குளிர வைத்து ஒட்டுமொத்த விளையாட்டு வீரர்களுக்கும், நாட்டிற்கும் மகத்தான சிறப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார்.
மற்றொரு இந்திய வீரரான வருண் சிங் பாடி உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்றார். இந்திய வீரர்கள் இருவர், ஒரே பிரிவில், இரு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய திருநாட்டிற்கு பாரா ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் புதிய இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.
பதக்கம் பெற்ற வீரர்களை பாராட்டும் இந்த நேரத்தில் அவர்களுக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற வீரர்களை பாராட்டி ஊக்கம் அளித்தது போல் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் எடுத்து விருதுகளும் வழங்கி கவுரவிக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.