

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழ கத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதில் நல்ல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற அரசு மருத்துவக் கல்லூரி திறப்புவிழாவில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் மருத்துவக் கல்லூரி அமைக்க கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளி யிட்டார். அரசு கால்நடை பண் ணைக்குச் சொந்தமான இடத்தில் 127 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 11 மாதங்களில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. ரூ.231.22 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரியின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரியைத் திறந்து வைத்து 3,513 பேருக்கு ரூ.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது:
பல மன்னர்களால் ஆட்சி செய் யப்பட்ட, பல்வேறு வரலாற்றுச் சின்னங்கள் அமைந்துள்ள புதுக் கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரியும் அமைக்கப்பட்டி ருப்பது கூடுதல் சிறப்பு. இது தமிழகத்தின் 22-வது அரசு மருத்துவக் கல்லூரியாகும்.
கடந்த 6 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 1,000 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை பட்டமேற்படிப்புக்கு 403 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதில், 305 இடங்கள் நிகழாண்டில் அதிகரிக்கப்பட்டவை.
மேலும், 212 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவப் பணிகளுக்கான தேர்வு வாரியம் மூலம் 8,692 மருத்துவர்கள் 9,190 செவிலியர்கள் உட்பட 20,852 மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 39.59 லட்சம் கர்ப்பிணிகளுக்கு ரூ.3,687 கோடி உதவித் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலையில் அரசு வேளாண் கல்லூரி, மருதன் கோன்விடுதி, ஆவுடையார் கோவிலில் அரசு கலை அறிவியல் கல்லூரி, கந்தர்வக்கோட்டையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகியன கடந்த சில ஆண்டுகளில் தொடங்கப்பட்டுள்ளன.
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத் துக்கு நிரந்தர விலக்கு அளிக்கக் கோரி அனுப்பி வைக்கப்பட்டுள்ள 2 சட்ட வரைவுகளுக்கும் விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதில் நல்ல தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.
தமிழகத்தில் 28 இடங்களில் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும். அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் மணலை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ரூ.400 கோடி மதிப்பில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் மனதார ஏற்றுக்கொள்வார். அவரது செயல்பாடுகளைப் பின்பற்றி நடக்கும் இந்த அரசு நிரந்தரமாக நடைபெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து தூணாகவும், துணையாகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலை மையில் நடைபெற்ற இந்த விழாவில் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை முன்னிலை வகித் தார். தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் வரவேற்றார். ஆட்சியர் சு.கணேஷ் நன்றி கூறினார்.