ஞானதேசிகன் பொய் புகார்: முகுல் வாஸ்னிக் சிறப்பு பேட்டி

ஞானதேசிகன் பொய் புகார்: முகுல் வாஸ்னிக் சிறப்பு பேட்டி
Updated on
1 min read

உறுப்பினர் அட்டையில் காமராஜர் படம் போடுவது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் பற்றி ஞானதேசிகன் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் தவறானவை. உண்மைக்குப் புறம்பானவை என்று தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய தலைவர் குறித்து முடிவெடுத்து விட்டீர்களா?

அவரது ராஜினாமா கடிதம் குறித்தும், புதிய தலைவர் குறித்து மேலிடம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

‘அகில இந்திய மேலிடம், தமிழகத் தலைமையை மதிக்கவில்லை. காமராஜர், மூப்பனார் படங்கள் பொறித்த உறுப்பினர் அட்டைகளை தற்போது வழங்கவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது’ என ஞான தேசிகன் குற்றஞ்சாட்டியுள்ளாரே?

அவரது குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது, உண்மைக்குப் புறம்பானது.

காமராஜர், மூப்பனார் படங் களை உறுப்பினர் அட்டையில் இருந்து அகற்றவேண்டும் என்று தமிழக காங்கிரஸுக்கு மேலிடம் உத்தரவிட்டுள்ளதா?

அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. காமராஜரை பொறுத்தவரை, இந்தியாவில் காங்கிரஸாராலும், தேசிய அளவில் அனைத்து தலைவர் களாலும் மதிக்கப்படக்கூடிய உயர்ந்த தலைவர். மூப்பனாரும் தனது கட்சி வளர்ச்சிப் பணிகள் மூலம் காங்கிரஸ் தலைவர்களை ஈர்த்தவர். உறுப்பினர் அட்டை குறித்து தமிழக காங்கிரஸுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

தற்போது காங்கிரஸ் மேலிடம் குறித்து குற்றஞ்சாட்டியுள்ள ஞானதேசிகன் மற்றும் வாசன் அணியினர் மீது மேலிடம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமா?

தற்போது யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவு செய்யவில்லை.

இவ்வாறு முகுல் வாஸ்னிக் தெரிவித்தார்.

மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை தமிழகத்தின் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் நேரிலும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். விரைவில் அவர் சென்னைக்கு வந்து, அவசரமாக செயற்குழுக் கூட்டத்தை கூட்டியோ அல்லது முக்கியத் தலைவர்களை டெல்லிக்கு அழைத்தோ, ஆலோசனை நடத்த மேலிடம் உத்தரவிட்டுள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in