

விவசாயிகளுக்கு நியாயம் வழங்காமல் இருப்பதற்கான காரணத்தைக் கூறும்படி மத்திய, மாநில அரசுகளை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் முழுமையாக செவிசாய்க்கவில்லை என்பதையே காட்டுகிறது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''டெல்லியில் கடந்த 32 நாட்களாக விவசாயிகள் போராடிக் கொண்டிருப்பது மத்திய, மாநில அரசுகளின் பாராமுகமும், அலட்சியப் போக்குமே காரணம். விவசாயம் நலிவடைந்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்டங்களில் பல விதமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால், மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கைகளை இன்னும் நிறைவேற்றவில்லை.
விவசாயிகளுக்கு நியாயம் வழங்காமல் இருப்பதற்கான காரணத்தைக் கூறும்படி மத்திய, மாநில அரசுகளை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது, விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் முழுமையாக செவிசாய்க்கவில்லை என்பதையே காட்டுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை உடனடியாக அமைத்து நதிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக வறட்சிக்கு உரிய நிவாரணத்தை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்.
தமிழக விவசாயிகளின் ஒட்டுமொத்த விவசாயக் கடன்களை உடனடியாகத் தள்ளுபடி செய்து, அவர்களின் பிற கோரிக்கைகளையும் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றி விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் காண வழிவகுக்க வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.